அண்மையில் ஏற்பட்ட இணைய வங்கி, கட்டணச் சேவைத் தடைகளின் மூலகாரணத்தை டிபிஎஸ் வங்கி கண்டறிவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) உறுதிசெய்து வருகிறது.
சென்ற ஆண்டு ஏற்பட்ட சில சேவைத் தடைகளைத் தொடர்ந்து, மீண்டும் மே 2ஆம் தேதி, டிபிஎஸ், பிஓஎஸ்பி இணைய வங்கி, கட்டணச் சேவைகள் தடைப்பட்டன.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு ரொக்கப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதோடு, கட்டணம் செலுத்துவதற்கு மாற்று வழிகளும் அவர்களிடம் இல்லை.
கடந்த 2023ல் ஏற்பட்ட சேவைத் தடைகளுக்கான காரணத்தை அடையாளங்கண்டு, அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான திட்டம் தற்போது நடப்பில் உள்ள நிலையில், அண்மைய சேவைத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
“2023ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் அனுபவித்த சேவைத் தடைகளிலிருந்த குறைபாடுகளை அடையாளம் காண்பதில் டிபிஎஸ் வங்கி கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளபோதும், அதனைச் சரிசெய்யும் திட்டம் இன்னும் நிறைவுபெறவில்லை,” என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
வங்கியின் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளில் ஆறு மாத நிறுத்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, அண்மைய சேவைத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய ஆணையம், டிபிஎஸ் வங்கியின் முன்னேற்றத்தை அணுக்கமாகக் கவனித்துவருவதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.

