அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நூற்றாண்டு காணாத வரிவிதிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையை மேலும் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வரிவிதிப்புகள் உலக வர்த்தகத்தைச் சீர்குலைப்பதோடு பதிலுக்குப் பதில் வரிவிதிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலவும் வேளையில் புளூம்பெர்க் ஊடகம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
அதில் பங்கேற்ற 14 பொருளியல் நிபுணர்களும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் சிங்கப்பூர் வெள்ளியின் நாணயச் சந்தை விகிதம் தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்யும் என்று தெரிவித்து உள்ளனர்.
வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) அந்த மாற்றம் நிகழக்கூடும் என்பது அவர்களின் கணிப்பு.
சிங்கப்பூர் நாணய ஆணையம் விலைகளை நிலைப்படுத்த வட்டி விகிதத்திற்குப் பதில் நாணய மாற்று விகிதத்தையே பயன்படுத்துகிறது.
அந்த விகிதம் குறைக்கப்பட்டால், குறைவான வேகத்தில் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வலுவடைய அது வழிவகுக்கும்.
திரு டிரம்ப் கடந்த நவம்பர் மாதம் அதிபராக வெற்றி பெற்ற பின்னர் ஆசிய நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது.
இருப்பினும், கடந்த மாதம் அதில் தொய்வு ஏற்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்களது அமெரிக்கச் சொத்துகளை விற்கும் நிலை ஏற்பட்டது அதற்கு முக்கிய காரணம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 2.8 விழுக்காடு ஏற்றம் கண்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் உலகளாவிய எதிர்கால நிலவரம் மோசமாக உள்ளது என்று கருத்துரைத்து உள்ளார் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வங்கியியல் குழுமத்தின் ஆசியாவுக்கான ஆய்வுப் பிரிவுத் தலைவரான கூன் கோ.
சீனாவுக்கு 145 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூருக்கான வரி 10 விழுக்காடாக உள்ளது. ஆயினும், ஏற்றுமதி சார்ந்த பொருளியலைக் கொண்ட ஒரு நாட்டின் வெற்றி என்பது அதன் வர்த்தகப் பங்காளிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டது என்பது நிபுணர்களின் கருத்து.