நிதித்துறை செல்வாக்காளர்கள் (finfluencers) மீது சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து புகார்கள் பதிவாகிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சின் துணை அமைச்சர் ஆல்வின் டான் புதன்கிழமை (நவம்பர் 13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதலீடுகள், சேமிப்பு, வரவு செலவு உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த அறிவுரைகளை சமூக ஊடகங்கள் மூலம் தருபவர்கள் நிதித்துறை செல்வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான புகார்களில் நிதித்துறை செல்வாக்காளர்கள் நிதி சார்ந்த அறிவுரைகள் வழங்கவில்லை, மேலும் அவை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் விதிமுறைகளை மீறாதவை என்று திரு டான் தெரிவித்தார்.
மேலும் நிதி சார்ந்த அறிவுரைகள் வழங்குபவர்கள் தகுந்த உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பொதுவான கல்வி தொடர்பான தகவல்களை சமூக ஊடகத்தில் கூறுவது நிதி அறிவுரை இல்லை என்று துணை அமைச்சர் டான் குறிப்பிட்டார்.
அதேபோல் தகுந்த உரிமம் இல்லாமல் நிதி சார்ந்த அறிவுரைகள் வழங்குபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நினைவூட்டினார்.
கடந்த 3 ஆண்டுகளில் உரிமம் இல்லாமல் நிதி சார்ந்த அறிவுரைகள் வழங்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் யாரும் நிதித்துறை செல்வாக்காளர்கள் இல்லை என்று திரு டான் தெரிவித்தார்.

