2025 நிலவரம் சிங்கப்பூரின் நாணயக் கொள்கை தளர்வுக்கு வழிவகுக்கலாம் என கணிப்பு

2 mins read
950c4563-beff-4228-a96a-db923cd0858d
சிங்கப்பூர் நாணய ஆணையம். - கோப்புப் படம்: எஸ்பிஎஸ் மீடியா

முன்னுரைப்பையும் தாண்டி சிங்கப்பூர் பொருளியல் 2024 இறுதி மூன்று மாதங்களில் வளர்ந்தபோதிலும் அந்த வளர்ச்சி அதற்கு முந்திய மூன்று மாதங்களைக் காட்டிலும் குறைவு.

அந்தப் போக்கு, இந்த ஆண்டின் வளர்ச்சி நிலவரத்தைக் கடுமையாக்கினால், சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையில் சிறிய தளர்வை மேற்கொள்ளக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

2024ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 3.8 விழுக்காடாக இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்து இருந்தனர்.

ஆனால், பதிவான வளர்ச்சி அதையும் தாண்டி 4.3 விழுக்காடாக அதிகரித்தது என்று வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பதிவான 5.4 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவு.

காலாண்டுக்குக் காலாண்டு என்ற சராசரி ஒப்பீட்டில் பொருளியல் வளர்ச்சி 0.8 விழுக்காடு இறங்கும் என்று எதிர்பார்ப்புகள் வெளியான நிலையில் அதற்கு மாறாக 0.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.

நடப்பு 2025ஆம் ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 1 முதல் 3 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று கடந்த நவம்பர் மாதம் அரசாங்கம் மதிப்பிட்டு இருந்தபோதிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலவரம் எதனையும் அது வெளியிடவில்லை.

இதற்கிடையே, சிங்கப்பூர் இந்த ஆண்டு 2.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

மெதுவடையும் சீனாவின் வளர்ச்சி, டிரம்ப் அதிபரான பின்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் பதற்றம் உருவாகும் சாத்தியம், அதிகரிக்கும் புவிசார் பூசல்கள் போன்ற வெளிப்புறச் சூழல்களை சிங்கப்பூரின் வளர்ச்சி பிரதிபலிக்கும் என்பது அவர்களின் முன்னுரைப்பு.

“இவற்றுக்கு அப்பால் இன்னும் சவால்கள் நிறைந்ததாக 2025ஆம் ஆண்டின் நிலவரம் இருக்கும்,” என்று புளூம்பெர்க் பொருளியல் நிபுணர்களில் ஒருவரான தமாரா ஹெண்டர்சன் தெரிவித்து உள்ளார்.

“நிச்சயமற்ற சூழல் நீடிப்பதால், சிங்கப்பூர் நாணய மதிப்பு அதன் வர்த்தகப் பங்காளிகளின் நாணயத்துக்கு நிகரான மதிப்பின் வேகத்தைக் குறைத்து, இறுக்கமான நாணயக் கொள்கையை சிங்கப்பூரின் மத்திய வங்கி தளர்த்தக்கூடும்,” என்றார் திருவாட்டி தாமாரா.

ஒட்டுமொத்த மற்றும் மூலாதாரப் பணவீக்கம் 2 விழுக்காட்டுக்கும் கீழ் இருப்பதால் சிங்கப்பூர் நல்ல நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்