அலையன்ஸ் நிறுவனம் என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க முன்வந்துள்ளது குறித்து மதிப்பிடுகையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் சந்தாதாரர்களின் நலனுக்கு முன்னுரிமை தரும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
அதாவது, அலையன்ஸ்-இன்கம் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால், தற்போதைய சந்தாதாரர்களுடனான நிபந்தனைகளில் மாற்றம் இருக்காது என்பதை ஆணையம் உறுதிசெய்யும்.
சிங்கப்பூரர்களின் காப்புறுதித் தேவைகளுக்கு ஈடுகட்ட, போட்டித்தன்மை மிக்க காப்புறுதித் துறைதான் சிறந்த வழி என்று ஆணையம் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் திரு சீ கூறினார்.
தற்போதைய மற்றும் வருங்காலச் சந்தாதாரர்களின் பாதுகாப்புக்கு, போட்டித்தன்மை மிக்க காப்புறுதித் துறையைக் கொண்டிருப்பதே சிறந்த வழி என்பது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நம்பிக்கை என்றார் அவர்.
அது, நீண்டகாலத்திற்கு நிலைத்தன்மை, சந்தாதாரர்களுக்குத் தெரிவு செய்யும் வாய்ப்பு போன்றவற்றை வழங்கும் என்று திரு சீ சொன்னார்.
காப்புறுதி என்பது சிக்கலான வர்த்தகம் என்று குறிப்பிட்ட அவர் வருங்காலத்தில் ‘இன்கம்’ நிறுவனம் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பது போன்ற கேள்வியும் முக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறினார்.
சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் காப்புறுதி வழங்கும் இன்கம் நிறுவனத்தின் கடப்பாட்டில் அலையன்ஸ்-இன்கம் ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆணையம் மதிப்பிட்டுவிட்டதா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துச் சந்தாதாரர்களுக்கும் தற்போதைய காப்புறுதி ஒப்பந்தங்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப இன்கம் நிறுவனம் அதன் கடப்பாட்டை நிறைவுசெய்யும் என்று ஆணையம் எதிர்பார்ப்பதாகத் திரு சீ கூறினார்.
தற்போதைய காப்புறுதித் திட்டங்களின் கடப்பாடுகள் நிறைவேற்றப்படுவதற்கு இன்கம், அலையன்ஸ் என இரு நிறுவனங்களையுமே ஆணையம் பொறுப்பேற்க வைக்கும் என்றும் அவர் கூறினார்.

