முதலீட்டுத் திட்டங்கள் விற்பனை, தரகுத்தொகை தொடர்பில் விதி மீறியமைக்காக சிங்கப்பூர் நாணய ஆணையம், நான்கு நிதி நிறுவனங்களைக் கண்டித்துள்ளது.
ஏஐஏ நிதி ஆலோசகர்கள் (AIA FA), புருடென்சியல் காப்புறுதி நிறுவனம் சிங்கப்பூர், அவிவா, அதன் துணை நிறுவனமான அவிவா நிதி ஆலோசகர்கள் (Aviva FA) ஆகிய நான்கு நிறுவனங்களும் இடர் நிர்வாகம், மேற்பார்வையாளர் வெகுமதி தொடர்பான ஒழுங்கு விதிமுறைகளை மீறிவிட்டதாக நாணய ஆணையம் தெரிவித்தது.
ஒழுங்கு விதிமுறைகளை மீறி வெகுமதி பெற்றதற்காக அவிவா நிறுவன ஆலோசகர் பீட்டர் டான் ஷோவ் யீயையும் தமது அலுவலகப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காக அவிவா எஃப்ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் இயக்குநருமான லயனல் சீ பூன் சாயையும் ஆணையம் கண்டித்து இருக்கிறது.
இத்தகைய கடிந்துரை, நாணய ஆணையத்தால் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. ஒரு நிதி நிறுவனத்தின் ஒழுங்குமுறை விதிமீறல், அதன் வாடிக்கையாளர்களிடத்தில் நிதிசார்ந்து எந்தவொரு நேரடி பாதிப்பையும் ஏற்படுத்தாதபோது இத்தகைய கடிந்துரை பிறப்பிக்கப்படும்.
அந்த நிதி நிறுவனங்கள் எதிர்காலத்திலும் விதிமீறல்களில் ஈடுபட்டு, நாணய ஆணையம் அமலாக்க நடவடிக்கை எடுக்கும்போது, இந்த எச்சரிக்கைகள் கணக்கில் கொள்ளப்படும்.
அந்தக் காப்புறுதி நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்தியதாக ஆணையம் தெரிவித்தது. நிதி ஆலோசகர்கள் சட்ட விதிகளுக்கு முரணாக, மேற்பார்வையாளர்களுக்குப் பலமுறை வெகுமதி வழங்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
"தங்களது முகவர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிப்படுத்த நிதி நிறுவனங்கள் தீவிர ஏற்பாடுகளைச் செய்யும் என நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது," என்று ஆணையத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஹோ ஹெர்ன் ஷின் கூறியுள்ளார்.
முதலீடு, ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் விற்பனை சார்ந்த வெகுமதி நடவடிக்கைகளுக்கான ஆணையத்தின் ஒழுங்குவிதிகள், நிதி ஆலோசனைத் துறையில் நல்ல விற்பனை நடத்தையை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன என்றும் திருவாட்டி ஹோ குறிப்பிட்டார்.
"உயர்ந்த அறநெறிகளை உறுதிசெய்வதன் முக்கியத்துவம் குறித்து நிதித்துறைக்கு தெளிவான செய்தியைக் கொண்டுசெல்லும் விதமாக, இந்நான்கு நிதி நிறுவனங்கள் மீதும் அவற்றில் பணிபுரியும் சிலர் மீதும் விதிமீறியதற்காக உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றும் அவர் சொன்னார்.

