இணையம், தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளிலும் சிங்கப்பூர் நிதித் துறையின் வலிமையை உறுதி செய்ய உதவும் வகையில் இணைய, தொழில்நுட்ப மீள்திறன் நிபுணர் குழு ஒன்றை சிங்கப்பூர் நாணய ஆணையம் அமைத்துள்ளது.
இது, 2017ல் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுக்கு மாற்றாக அமைகிறது என்று ஆணையம் புதன்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இணையப் பாதுகாப்புடன் இக்குழு தொழில்நுட்ப மீள்திறன் குறித்தும் ஆராயும். நாட்டு நிதித் துறையின் செயல்பாட்டு மீள்திறனை அதிகரிப்பதற்கு இவை முக்கியம்.
“சேவைகளை வழங்க நிதித்துறை அமைப்புகள் தொழில்நுட்பத்தை அதிகளவில் நம்பியிருப்பதால், தொழில்நுட்ப மீள்திறனைப் பராமரிப்பதற்கும் இணைய அபாயங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் இது அவசியம்,” என்று நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் கூறினார்.
இரு துறைகளையும் சேர்ந்த 13 அனைத்துலகத் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழு, நிதித் துறை எதிர்கொள்ளும் புதிய தொழில்நுட்ப அபாயங்கள், அச்சுறுத்தல்கள் குறித்து ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும்.
நிதித் துறை தொழில்நுட்பம், இணைய மீள்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள், நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் இது வழங்கும்.
குழு உறுப்பினர்கள் கூட்டம் 2025ன் நடுப்பகுதியில் நடைபெறும்.