‘திரீ ஏரோஸ் கேப்பிடல்’ மின்னிலக்க நாணய முதலீட்டு நிறுவனத் தோற்றுவிப்பாளர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் தடை

1 mins read
ec705275-e403-4158-8b95-ff17bb467000
சிங்கப்பூரர்களான சு சு (இடது), கைல் லிவிங்ஸ்டன் டேவிஸ் இருவருக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஒன்பது ஆண்டுகள் தடை விதித்துள்ளது. - படங்கள்: சு சு/டுவிட்டர், ஓபலெஸ்க் டிவி/யூடியூப்

சிங்கப்பூர் நாணய ஆணையம், ‘திரீ ஏரோஸ் கேப்பிடல்’ எனும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிறுவனத் தோற்றுவிப்பாளர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

புதன்கிழமை (செப். 13) முதல் அது நடப்புக்கு வந்துள்ளது.

சிங்கப்பூரில் செயல்படும் எந்தவொரு முதலீட்டுச் சேவை வழங்கும் நிறுவனத்திலும் நிர்வாகப் பொறுப்பிலோ இயக்குநராகவோ பங்குதாரராகவோ அவர்கள் செயல்பட இயலாது.

திரு சு சு, திரு கைல் லிவிங்ஸ்டன் டேவிஸ் இருவரும் சிங்கப்பூரர்கள்.

தடை பற்றிக் கருத்துரைக்க சு சு மறுத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரிவித்தது.

தடை விதிக்கப்பட்ட இருவரும் பங்குபத்திர, வருநிலை வர்த்தகச் சட்டம் 2001இன்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி இல்லை என்பதை ஆணையம் சுட்டியது.

ஏற்கெனவே பங்குபத்திர, வருநிலை வர்த்தகச் சட்டம் 2001, உரிமம், வர்த்தக நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை மீறியதன் தொடர்பில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ‘திரீ ஏரோஸ் கேப்பிடல்’ நிறுவனத்தின்மீது ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். டேவிஸ் அதன் தலைவராகவும் இயக்குநராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

2022ஆம் ஆண்டு நொடித்துப்போன முதல் மின்னிலக்க நாணய நிறுவனம் அது.

2022 ஜனவரியில் நிதி நிர்வாகத்திற்காக திரு ஆர்தர் சியோங் ஜுன் யூங் என்பவரை நியமித்தது குறித்து நிறுவனம் ஆணையத்திற்குத் தகவலளிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது. அவர் ஆகஸ்ட் 2020 முதல் 2021 செப்டம்பர் வரை நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்