சமயத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது குறித்து மசகோஸ் எச்சரிக்கை

2 mins read
d3d14ee7-19d8-406f-a25a-4b0306028219
தெம்பனிஸ் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் குழுவுடன் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஏப்ரல் 26ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃப்லி, சமயத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் குறிப்பாக உலகளாவிய விவகாரங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ‘கருத்து வேறுபாடு ஒருபோதும் பிளவை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’,” என்று தெம்பனிஸ் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் சூழ திரு மசகோஸ் தெரிவித்தார்.

“நாம் கவனமாக இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் விரிசல்கள் ஆழமடையக்கூடும். நம்பிக்கை கட்டமைக்கப்படாத சில நாடுகளில் சிறுபான்மையினர், முஸ்லிம்கள்கூட சுதந்திரமாக வழிபடப் போராடுகிறார்கள். பள்ளிவாசல்களுக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. கல்லறைகளுக்குக்கூட பிரச்சினை ஏற்படுகிறது,” என்றார் அவர்.

மூன்று வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் தலையிடும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டதால் அவற்றை அகற்ற அரசாங்கம் உத்தரவிட்டுள்ள வேளையில் அமைச்சர் மசகோஸ் ஏப்ரல் 26ஆம் தேதி செய்தியாளர்களிடம் தமது கருத்தை வெளியிட்டார்.

ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பாஸ் என்று அழைக்கப்படும் பார்ட்டி இஸ்லாம் சே-மலேசியா கட்சியின் அரசியல்வாதிகள் இருவரும், சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் சிங்கப்பூரர் ஒருவரும், வெளியிட்ட பதிவுகளைத் தடுக்க மெட்டா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சிக் குழுவுடன் இருந்த அமைச்சர் மசகோஸ், சிங்கப்பூரின் நல்லிணக்கம் எளிதாக வந்துவிடவில்லை, பல ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கப்பட்டது. அது, மிக எளிதாக வந்துவிட்டதாக நினைக்கக் கூடாது என்றார்.

“நமக்கு இடையிலான ஒற்றுமையை தொடர்ந்து கட்டிக்காக்க தொடர் முயற்சிகள் தேவை,” என்று வலியுறுத்திய அவர், சிங்கப்பூரர்களின் பொதுவான அடையாளத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்றார்.

பல இன மக்கள், பரஸ்பர மரியாதை உள்ளிட்டவை சிங்கப்பூரில் அமைதி, நிலைத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முக்கிய காரணம் என்று அமைச்சர் மசகோஸ் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்