அனைத்துலக ஓய்வூதியத் திட்டக் குறியீட்டில் தொடர்ந்து ‘ஏ’ தரத்தில் மசேநிதி

அனைத்துலக ஓய்வூதியத் திட்டக் குறியீட்டில் தொடர்ந்து ‘ஏ’ தரத்தில் மசேநிதி

கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

20 Oct 2026 - 5:41 pm

2 mins read

அனைத்துலக ஓய்வூதியக் குறியீட்டுத் தரவரிசையில், சிங்கப்பூரின் மத்திய சேமநிதி (மசேநிதி) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘ஏ’ தரத்தில் வந்துள்ளது.

ஆசியாவில் இத்தகைய உயரிய தரத்தைப் பெற்ற முதல் ஓய்வூதியத் திட்டமான மசேநிதியின் ஒட்டுமொத்தப் புள்ளி, கடந்த ஆண்டின் 80.8லிருந்து 82ஆக உயர்ந்துள்ளது.

நீடித்த நிலைத்தன்மை, சிறந்த பலன், அதிக நம்பகத்தன்மை கொண்ட, வலுவான முதன்மை ஓய்வூதிய முறைமைகளுக்கே மார்ஷ் நிறுவனத்தின் இந்தக் குறியீட்டில் ‘ஏ’ தரம் வழங்கப்படுகிறது. இப்பட்டியலில் நெதர்லாந்து 85.8 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியாவும் ‘ஏ’ தரத்தைப் பெற்றுள்ளது.

உலக அளவில் பிறப்பு விகிதம் குறைவது, ஆயுட்காலம் அதிகரிப்பது ஆகியவற்றின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு, இம்முறை 55 ஓய்வூதியத் திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் உட்பட உலகின் 66 விழுக்காட்டு மக்கள்தொகையைக் கொண்ட ஓய்வூதிய முறைமைகளை இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது.

தொழில்முறை சேவை நிறுவனமான மார்ஷ், முதலீட்டு நிபுணர்களின் அனைத்துலக அமைப்பான சிஎஃப்ஏ நிறுவனத்துடன் இணைந்து 2008 முதல் இந்த வருடாந்தரக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது.

மூப்படையும் சமுதாயப் பின்னணியில், ஓய்வுபெறும்போதும் 80 வயதை எட்டும்போதும் கிடைக்கக்கூடிய வருமானத்தின் அளவைக் கணக்கிடும் வகையில், ‘போதுமான நிதி’ தொடர்பான துணைக்குறியீட்டை ஆய்வு மாற்றியமைத்துள்ளது.

அதில் சிங்கப்பூரின் புள்ளி 79.4லிருந்து 82.8ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், நம்பகத்தன்மையில் சிங்கப்பூர் 90.4 புள்ளிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அரசாங்க வரிப் பணத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல நாடுகளின் ஓய்வூதியத் திட்டங்களைப் போலன்றி, சிங்கப்பூரின் மசேநிதித் திட்டம் முழுமையாக முதலாளிகள், ஊழியர்களின் பங்களிப்பைக் கொண்டது.

இந்த நிதி, பாதுகாப்பான அரசாங்க முதலீடுகளில் முதலீடு செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு நிலையான வட்டி வழங்கப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிதிச் சவால்களால், மசேநிதி ஓய்வுக்கால வழங்கீடு பாதிக்கப்படாது எனப் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் ஆயுள்காலம் உயர்ந்து வரும் சூழலில், உறுப்பினர்கள் தங்களின் ஓய்வுக்கால மாதாந்திர வழங்கீட்டைத் தாமதப்படுத்துவதன் மூலம் அதிகத் தொகையைப் பெறமுடியும்.

2026ல் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 21.4 விழுக்காட்டினர் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுமாக உள்ள அதிக மூப்படைந்த சமுதாயமாகி உள்ளது. இந்நிலையில், முதியோர் வேலைவாய்ப்பு, மறுவேலைவாய்ப்பு வயது வரம்புகளைப் படிப்படியாக உயர்த்தி, ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்