இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடத் தமிழ் மக்கள் ஏறத்தாழ 2,000 பேர், ஓஃபிர் ரோட்டில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் திரண்டனர்.
காலை 9.30 மணியளவில் தொடங்கிய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காலை 9 மணிமுதலே மக்கள் வரத்தொடங்கினர்.
அரங்கம் நிரம்பிய கூட்டம் இருந்ததால் தேவாலய வளாகத்திலும் பலர் அமர்ந்து வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலும் பலர் நின்றபடி பிரார்தனைகளை மேற்கொள்வதைக் காணமுடிந்தது.
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் இரவு, கிறிஸ்துமஸ் தின வழிபாடு என இரு கூட்டங்களிலும் மக்கள் திரளாகப் பங்கேற்றதாக தேவாலய ஊழியர்கள் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் கூட்டுத் திருப்பலி
ஆண்டாண்டுகாலமாகத் தமிழ் மக்களுக்குத் தமிழில் பிரார்த்தனைக் கூட்டம் இந்த தேவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இது கத்தோலிக்க முறையைப் பின்பற்றும் தேவாலயமாகும்.
காலை 9.15 மணியளவில், குருமார்கள் பவனியாகச் சென்று குழந்தை இயேசுவை, தூபம் காட்டி ஆராதனை செய்து, மக்களின் தரிசனத்திற்குப்பின் குடிலில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கமான கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் திருத்தந்தை லியோ ஜஸ்டின் வழிநடத்தினார்.
மூன்று ஞானிகள் இயேசுவைத் தேடிச் செல்ல, அவர் இடையர்களைத் தேர்தெடுத்த கதையை விளக்கினார். கடவுளின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த கதையைக் கூறி, சமகால வாழ்விலும் அவரது வரவு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரை அடைய அமைதியும், அன்புமே வழி எனும் செய்தியை அனைவருக்கும் கூறும் விதமான வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்கள் வாழ்வு சிறப்பாக அமையவேண்டி, கூடியிருந்தோர் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியில், அனைவரின் வாழ்விலும் அமைதியும் நல்லிணக்கமும் சூழ வாழ்த்தும் விதமாக ஒருவரையொருவர் வணங்கி, சமாதானம் சொல்லிக்கொண்டனர்.
அதனையடுத்து வந்திருந்தோர்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பகிரும் அங்கமும் இடம்பெற்றது.
பாவத்தில் வீழ்ச்சியடைந்த மனிதகுலத்தை மீட்டெடுத்து, மனிதனைப் புனிதனாக மாற்றுவதற்காக இறைவன் மனித உருவெடுத்த நாள் கிறிஸ்துமஸ். இறைவன் கொணர்ந்த அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி, அனைவரும் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம்,” என்றார் திருத்தந்தை லியோ ஜஸ்டின்.
“மனிதன் கடவுளை விட்டுப் பிரிவதே சமூகத்தில் சிரமங்கள் ஏற்படக் காரணம். பிறர் நலம் கருதாது தன்னலத்துடன் ஓடி, கருணையை மறப்பது மனிதத் தன்மை இழப்பதாகும். இரக்கம் எனும் நற்குணமும் பிறரைச் சமமாகப் பாவிக்கும் நிலையும் உலகை மேம்படுத்தும்,” என்றார் அவர்.
கிறிஸ்துமஸ் தின மகிழ்ச்சியும் வேண்டுதல்களும்
“எனது வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுகிறது. அதற்கு இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று கண்ணீருடன் நெகிழ்ச்சியாகச் சொன்னார் கேஎஃப்சி ஊழியரான விக்டோரியா கலா, 64.
தமது கணவரின் உடல்நிலை உட்பட வாழ்வின் பல சிரமங்களைப் போக்கி ஆண்டவர் கிருபை செய்ததாகக் கூறிய அவர் தமது மகளின் நல்வாழ்வுக்கும் மகனின் திருமணம் சிறப்பாக நடைபெறவும் வேண்டியதாகச் சொன்னார்.
தமது மொத்த குடும்பமும் மாற்று மதத்தைப் பின்பற்றும் நிலையில் தாம் கத்தோலிக்க முறையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார் வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஊழியர் எலிசெபெத், 52. முந்தையை நாள் இரவு 1.30 மணிவரையும் கிறிஸ்துமஸ் நாளன்று காலையும் தேவாலயத்தில் பிரார்த்தனைகள் மேற்கொண்ட அவர், “இயேசுவின் பிறப்பை அனுபவித்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது,” என்றார்.
“கிறிஸ்துமஸ் அன்பை விதைக்கிறது. மாதாவின் அன்பு அளப்பரியது. அன்பைப் பரிமாறினால் கடவுளை அடையலாம்; வெற்றிகள் பெறலாம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பணியாற்றும் தமது கணவருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட திருச்சியிலிருந்து வந்துள்ளார் அருளரசி, 27. இங்குள்ள கொண்டாட்டங்களில் முதன்முறை பங்கேற்றதில் மகிழ்ச்சி என்றும் பலரைச் சந்தித்தது சுவையான அனுபவம் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஈராண்டுகளாக இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் குளோரி அடைக்கல ரீச்சன், 24, “இங்கு கிறிஸ்துமஸ் என்பது நண்பர்களுடன் ஒன்றுகூடுவதுதான்,” என்றார்.
லூர்து மாதா ஆலயத்தில் 28 ஆண்டுகளாகத் தொண்டூழியராகப் பணியாற்றும் ஆரோக்கியசாமி தாமஸ், “இங்கு வருவோர் அமைதியுடன் வந்து வழிபாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்கிறோம். இப்பணியில் ஈடுபடுவது அளவற்ற மகிழ்ச்சி தருகிறது. திரளான மக்களுக்குச் சேவை செய்வது எங்கள் கொண்டாட்ட மனநிலையை இன்னும் மேம்படுத்துகிறது,” என்றார்.

