ஜோகூர் பாரு: ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் சிங்கப்பூர் செல்வோர் நிலவரத்தைக் கவனித்து தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு ஜோகூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து மலேசியா நோக்கி வரும் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரண்டு மணி நேரமாக நெரிசலில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு வரும் வழியில் கடற்பாலத்தில் ஏராளமான வாகனங்கள் நீண்டநேரம் காத்திருந்ததை இணையத்தில் காணப்பட்ட போக்குவரத்து கேமரா நேரடிக் காட்சிகள் காட்டின.
ஜோகூர் பாரு குடிநுழைவு, தனிமைப்படுத்தும் அலுவலகத்தின் எல்லா முகப்புகளும் திறந்துள்ள நிலையில் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து வரும் வாகனங்கள் தேங்கியதாக உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்ல இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகலாம் என்பதால் அதற்கேற்ப பொதுமக்கள் தங்களது பயணத்தைத் திட்டமிடுவார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட நெரிசல் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நெரிசலில் ஏராளமான பேருந்துகள் சிக்கியதால் குடிநுழைவு அனுமதியைப் பெற்ற பின்னரும் பலரால் சிங்கப்பூர் செல்லும் பேருந்துகளைப் பிடிக்க இயலவில்லை.
பிற்பகல் பெய்த கனமழை நெரிசலை மேலும் அதிகப்படுத்தியது.

