சிங்கப்பூரின் பெருந்திட்டங்களில் பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பணியும் ஒன்று. அது தற்போது வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
மேலும் பவளப்பாறைகளின் சிறுசிறு துண்டுகள் நீர் தொட்டிகளில் வளர்க்கப்படவுள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் தீவுகளில் நடக்கிறது.
தொட்டியில் சிறுசிறு துண்டுகளாக உள்ள பவளப்பாறைகள் நன்றாக வளர்ந்தவுடன் அவை சேதமடைந்த பவளப்பாறைகள் உள்ள இடங்களில் நடப்படும்.
மேலும் கடலுக்கு அடியில் பவளப்பாறைகள் வளரக்கூடிய இடங்களாக கருதப்படும் காலி இடங்களிலும் தொட்டியில் வளர்க்கப்பட்ட பவளப்பாறைகள் நடப்படும். கிட்டத்தட்ட 100,000க்கும் அதிகமான பவளப்பாறைகள் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த திட்டத்தின் முதல் படி தற்போது தொடங்கியுள்ளது.
பவளப்பாறைகள் வளர்க்கத் துணையாக இருக்கும் 6 நீர்த்தொட்டிகள் செயின்ட் ஜான்ஸ் தீவில் உள்ள மரீன் பார்க் கல்வி நிலையத்தில் உள்ளது.
அந்த 6 நீர்தொட்டிகளிலும் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 3,600 சிறுசிறு துண்டுகளாக உள்ள பவளப்பாறைகளை வளர்க்க முடியும்.
பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பெருந்திட்டத்திற்காக இதுவரை 2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பவளப்பாறைகள் வளர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. அது 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் முழுமையாகத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி இரண்டு நீர்த்தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 600 பவளப்பாறைகள் வரை வளர்க்கப்படுகிறது.
“தற்போது இந்த திட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் வழிநடத்துகின்றனர். இன்னும் சில காலத்தில் கடல் ஆர்வலர்கள் பவளப்பாறைகளை வளர்க்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்,” என்று செயின்ட் ஜான்ஸ் தீவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தபோது தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.