சிங்கப்பூரின் ஆகப்பழமையான சால்மன் மகப்பேறு இல்லம், பல்வேறு பயன்பாட்டுக்காக உருமாறவிருக்கிறது.
எண் 110 பிரின்செப் ஸ்திரீட்டில் சால்மன் மகப்பேறு இல்லம் செயல்பட்டது. அந்தக் கட்டடத்தை அரும்பொருளகமாகவும் பள்ளியாகவும் உணவகமாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டட வடிவமைப்பாளர் டியா பூன் சிம், தனது குழந்தைப் பருவத்தில் அங்கு பிறந்த தனது தங்கையை முதல் முறையாகப் பார்க்க தந்தையுடன் சென்றதை நினைவுகூர்ந்தார்.
திருவாட்டி டியாவும் இதே சால்மன் மகப்பேறு மருத்துவமனையில் 1955ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்தார்.
1950களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கட்டடம், 1980கள் வரை செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
திருவாட்டி டியா கடைசியாக 1962ல் தனது தங்கையைப் பார்க்க அங்கு சென்றிருந்தார்.
அதற்குப் பிறகு அங்கு செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அர்பன் ஸ்கெச்சர்ஸ் சிங்கப்பூர் என்ற நிறுவனத்தின் நிறுவனரான அவர், கட்டட வடிவமைப்பை வரைவதற்காக சில முறை அந்த இடத்துக்குச் சென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் முந்தைய தனியார் மகப்பேறு மருத்துவமனை அரும்பொருளகமாகவும் பள்ளியாகவும் உணவகமாகவும் மாற்றப்படுவதால் தான் பிறந்த இடத்தை மீண்டும் நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பு திருவாட்டி டியாவுக்குக் கிடைக்கவிருக்கிறது.
பழைய சால்மன் மகப்பேறு இல்லத்தை கட்டி, நடத்தியவர் மகப்பேறு மருத்துவரான எஸ்.ஆர்.சால்மன். 1984ல் அவர் காலமானார்.
அந்த மருத்துவமனை, டாக்டர் சால்மனின் மகளான மகப்பேறு மருத்துவர் யூவோன் மர்ஜோரி சால்மனின் வீடாகவும் இருந்துள்ளது. இவர், தனது 94 வயதில் 2020 அக்டோபர் 28ஆம் தேதி காலமானார். திருமணமாகாத அவர், தற்போது கேகே மகளிர், குழந்தைநல மருத்துவமனை என்று அழைக்கப்படும் முந்தைய கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் 44 ஆண்டுகள் பணியாற்றி 1996ல் ஓய்வு பெற்றார்.
2025 மே மாதத்தில் முன்னாள் மகப்பேறு மருத்துமனையை பல்வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த நகர மறுசீரமைப்பு ஆணையம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. முதல் மாடியில் அரும்பொருளகம், உணவகம், இரண்டாவது மாடியிலிருந்து 4வது மாடி வரை வர்த்தகப் பள்ளி, ஐந்தாவது மாடியில் அரும்பொருளகக் கிடங்கு ஆகியன அமைக்கப்பட உள்ளன.

