மின்வர்த்தகத் துறையின் முதிர்ச்சியே ஆட்குறைப்புக்குக் காரணம்: கவனிப்பாளர்கள்

மின்வர்த்தகத் துறையின் முதிர்ச்சியே ஆட்குறைப்புக்குக் காரணம்: கவனிப்பாளர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jun 2026 - 6:50 pm

2 mins read

மின்வர்த்தகத் துறை விரிவடையும் வேளையிலும் அத்துறையில் லசாடா, ‌ஷாப்பி, அமேசான் போன்ற நிறுவனங்களில் அண்மையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது.

மின்வர்த்தகத் துறையின் வளர்ச்சி இப்போது முதிர்ச்சி நிலையை எட்டியிருப்பதையே அந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் போக்கு

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் மின்வர்த்தகத் துறை அதிவேக வளர்ச்சிகண்டது. இப்போது, அத்துறை அதிகபட்ச லாபத்தை ஈட்டுவது, ஆக்ககரமாகச் செயல்படுவது, செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிரமான ஆட்சேர்ப்பு போன்ற அணுகுமுறைகள் இப்போது பின்பற்றப்படாவிட்டாலும் மின்வர்த்தகத் துறை இன்னும் விரிவடைந்துவருவதாகவும் அது பொருளியலில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கவனிப்பாளர்கள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

அண்மையில் லசாடா தென்கிழக்காசியாவில் பணியாற்றும் அதன் ஊழியர்களில் ஐந்து விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்தது. அவர்களில் சிங்கப்பூரில் வேலை செய்த ஊழியர்களும் அடங்குவர். ஆட்குறைப்பு செய்யப்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

‌ஷாப்பியிலும் ஆட்குறைப்பு

‌ஷாப்பியும் அண்மைய ஆண்டுகளில் சிலமுறை ஆட்குறைப்பு செய்தது. சூடுபிடித்துள்ள போட்டியைக் கையாளவும் அதிகபட்ச லாபத்தை ஈட்டவும் தற்போதுள்ள நெருக்குதலைக் கையாள அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது.

ஆண்மைய ஆண்டுகளில் சிலமுறை ஆட்குறைப்பு செய்த ‌ஷாப்பி.
ஆண்மைய ஆண்டுகளில் சிலமுறை ஆட்குறைப்பு செய்த ‌ஷாப்பி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

தேவை அதிகரிப்பு

கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் மின்வர்த்தகத் துறையின் வளர்ச்சி இப்போது மெதுவடைந்திருக்கலாம். அதேவேளை, பல்வேறு விற்பனைப் பிரிவுகளில் தேவை இன்னமும் அதிகம் இருந்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவப் பொருள்கள், அழகுப் பராமரிப்புப் பொருள்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் போன்றவை அவற்றில் அடங்கும் என்று கவனிப்பாளர்கள் சொல்கின்றனர்.

மின்வர்த்தகத் துறையின் வளர்ச்சி இப்போது முதிர்ச்சி நிலையை எட்டிவிட்டதையே அண்மையில் இடம்பெற்றுள்ள ஆட்குறைப்பு நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன என்பதே கவனிப்பாளர்களிடையே பரவலாக இருக்கும் கருத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்வர்த்தகத் துறையில் தலைதூக்கியுள்ள புதிய தளங்கள் மற்றும் எல்லை தாண்டிய சேவைகளால் போட்டி அதிகரித்துள்ளதாகவும் கவனிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், மின்வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் முறைகளை மறுஆய்வு செய்து எந்தப் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு தேவை என்பதில் கவனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆட்குறைப்புவர்த்தகம்லசாடாஷாப்பிவளர்ச்சி