முதன்முதலில் 2020ல் அறிவிக்கப்பட்ட 12-ஹெக்டர் ‘தோ பாயோ ஒருங்கிணைந்த கட்டமைப்பு’ (Toa Payoh Integrated Development) எனும் புதிய மையம், தோ பாயோ லோரோங் 6க்கும் தீவு விரைவுச்சாலைக்கும் இடையே கட்டப்பட்டு வருகிறது.
அதன் கட்டமைப்புப் பணிகளின் அதிகாரபூர்வத் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) காலை கட்டுமான இடத்தின் அருகே நடைபெற்றது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் ஆகியோருடன் பீஷான் - தோ பாயோ அடித்தள ஆலோசகர்கள் சோங் கீ ஹியோங்கும் சக்தியாண்டி சுபாட்டும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் புதிய மையம் குறித்த கூடுதல் தகவல்களும் பகிரப்பட்டன.
ஒரே இடத்தில் பலதரப்பட்ட வசதிகள்
காணொளி: ஸ்போர்ட்எஸ்ஜி (SportSG)
இப்புதிய மையத்தில், 10,000 பேர் அமரக்கூடிய விளையாட்டரங்கு, உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், 5,000 பேர் அமரக்கூடிய உட்புற விளையாட்டு மண்டபம், 2,000 பேர் அமரக்கூடிய நீர் விளையாட்டு நிலையம், 500 பேர் அமரக்கூடிய குழு விளையாட்டு மண்டபம், 1,500 சதுர மீட்டர் பரப்பளவிலான உடற்பயிற்சிக்கூடம் போன்றவை உள்ளடங்கும்.
புதிய தோ பாயோ நூலகமும் தேசிய சுகாதாரக் குழுமத்தின் புதிய தோ பாயோ பலதுறை மருந்தகமும் இக்கட்டமைப்பில் அமையும்.
தோ பாயோ வட்டாரப் பூங்காவும் இக்கட்டமைப்பில் அடங்கும். கூடுதல் பசுமை வளங்கள், வசதிகளோடு அது புதுப்பிக்கப்படும். தற்போதைய நிலப்பரப்பைச் சுற்றியே மறுவடிவமைப்பு இடம்பெறும். வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கங்கள் பாதுகாக்கப்படும். புதிய தோட்டங்கள், நாய்கள் ஓடுமிடம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா போன்றவையும் இருக்கும்.
‘காலாங் அலைவ்’ பெருந்திட்டம், ‘உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் பெருந்திட்டம்’ ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறி, சிங்கப்பூரில் விளையாட்டுக்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரர்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டுமெனில் உயர்தரக் கட்டமைப்புகள் அவசியம். அதனால், டெல்டா விளையாட்டு மையம் போன்றவற்றைப் புதுப்பித்துள்ளோம். புக்கிட் கேன்பரா விளையாட்டு நிலையத்தைக் கட்டினோம். (எதிர்கால) பொங்கோல் வட்டார விளையாட்டு நிலையத்தில் 5,000 பேர் அமரக்கூடிய விளையாட்டரங்கு கட்டப்பட்டு வருகிறது,” என்றார் அமைச்சர் எட்வின் டோங்.
தோ பாயோ விளையாட்டரங்கில் வருங்காலத்தில் மிர்க்சஸ் (Mirxes) நாடுகள் கிண்ணம், ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பின் ஆசிய கிண்ணத் தகுதிச்சுற்றுகள் போன்ற அனைத்துலகப் போட்டிகளையும் பெஸ்தா சுக்கான், கெட்ஏக்டிவ்!, புத்தாண்டுக் கொண்டாட்டம், சிங்கே ஊர்வலம் போன்ற சமூக நிகழ்ச்சிகளையும் காணலாம் என்றார் அமைச்சர் டோங்.
விளையாட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் புதிய வசதிகள்
புதிய விளையாட்டு வசதியைப் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார் தேசிய நீர்ப்பந்தாட்ட அணியின் தலைவர் லீ காய் யாங், 30.
“தேசிய அணியினரும் உயர்தர விளையாட்டாளர்களும் பயிற்சி செய்வதற்கு தற்போது காலாங், தெம்பனிஸ் எனச் சில இடங்களே உள்ளன. இதனால், மற்ற அணிகளுடன் மாறி மாறி அவ்வசதிகளைப் பயன்படுத்தவேண்டும். ஒருங்கிணைப்பது சற்று சவால்மிக்கது. புதிய வசதி இந்நிலையை மேம்படுத்தும்.
“தோ பாயோவில் கட்டப்படும் உட்புற நீச்சல் குளம், மழையையும் தாண்டி பயிற்சி நடைபெற வழிவகுக்கும். மேலும், 1970களிலிருந்து இயங்கிவரும் பழைய தோ பாயோ நீச்சல் குளத்திற்குப் பதிலாக, அண்மைய அனைத்துலக விதிகளுக்கேற்பக் கட்டப்படும் நீச்சல் குளம், உயர்தரப் பயிற்சிகளுக்கு உதவும்,” என்றார் காய் யாங்.
தோ பாயோ என்பது பழைய பேட்டை என்பதால், தம்மைப் போன்ற இளையர்கள் வீடு தேடும்போது அதை அவ்வளவாக நாடுவதில்லை என்றும் இப்புதிய வசதிகள் வந்ததும் கூடுதலானோர் தோ பாயோவை நாடுவர் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்குத் தம் மகனுடன் வந்திருந்த சஞ்சி, 40, புதிய கட்டமைப்பை வரவேற்றார். “அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இருந்தால் பிள்ளைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்,” என்றார் அவர்.
தம் பிள்ளையை நீச்சல் வகுப்புகளுக்கு அழைத்துவரும் ஜெயசீலன், 30, “பிள்ளைகள் நீச்சல் வகுப்பில் இருக்கும்போது பெற்றோர் நூலகத்திற்குச் சென்று படிக்கலாம். நேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க இது உதவும். ஆனால், இனி இங்குச் சற்று கூட்டமாக இருக்கும்,” என்றார்.