மசே நிதிக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் அன்றாட அதிகபட்சத் தொகை குறைக்கப்படுகிறது

2 mins read
a225f77b-eae0-4aeb-b887-7ba5fb1fe768
அதிக அளவில் பணம் எடுக்க விரும்பும் உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு மத்திய சேமநிதிக் கழகம் ஆலோசனை வழங்கியது. - படம்: சாவ்பாவ்

மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க, அன்றாடம் மத்திய சேம நிதிக் (மசேநி) கணக்குகளிலிருந்து எடுக்கப்படக்கூடிய அதிகபட்சத் தொகை செப்டம்பர் 25ஆம் தேதிமுதல் குறைக்கப்படவிருக்கிறது.

மோசடித் தடுப்பு நடவடிக்கையாக, அன்றாடம் எடுக்கக்கூடிய தொகையின் வரம்பு $200,000லிருந்து $50,000ஆகக் குறைக்கப்படும் என்று மத்திய சேமநிதிக் கழகம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கூறியது.

சென்ற ஆண்டு நவம்பரில் அன்றாடம் எடுக்கக்கூடிய தொகை வரம்பு $2,000ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வரம்பை அதிகரிக்க விரும்பும் மசேநி உறுப்பினர்கள் மத்திய சேமநிதி இணையத்தளத்திற்குச் சென்று அதனை உயர்த்தவேண்டும்.

இது, 55 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மசேநி உறுப்பினர்கள் இணையம்வழி எடுக்கும் பணத்துக்குப் பொருந்தும்.

தற்போது, அடையாளத்தை உறுதிசெய்ய மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள், 12 மணி நேரத் தணிப்புக் காலகட்டம் ஆகியவற்றைப் பொறுத்து, மசேநி உறுப்பினர்கள் $0லிருந்து $200,000வரை அந்த வரம்பை மாற்றிக்கொள்ளலாம்.

அதிக அளவில் பணம் எடுக்க விரும்பும் உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு மத்திய சேமநிதிக் கழகம் ஆலோசனை வழங்கியது. $50,000க்கும் அதிகமாக எடுக்கத் திட்டமிடுவோர், ஒரு நாளுக்கும் மேல் எடுத்துக்கொண்டு இணையத்தில் அதனைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒருவருக்கு $180,000 எஞ்சிய தொகை இருந்து, அது அனைத்தையும் எடுக்க அவர் திட்டமிட்டால், அவர் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு அன்றாடம் $50,000 எடுத்து, நான்காவது நாளன்று $30,000 எடுத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம், மோசடிக்கு ஆளானால், ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 180,000 வெள்ளியையும் இழப்பதை அவர் தவிர்க்கலாம்.

இவ்வாண்டின் முதல் பாதியில் இதுவரை இல்லாத அளவில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 26,500க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. $385.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவங்களில் 0.1 விழுக்காடு மசே நிதிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதன் தொடர்பிலானவை என்று மத்திய சேமநிதிக் கழகம் கூறியது. இழக்கப்பட்ட மொத்தத் தொகையில் அது ஏறக்குறைய 0.7 விழுக்காடு.

“இந்தச் சம்பவங்களில் பெரும்பான்மை, அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிகள், முதலீட்டு மோசடிகள் ஆகியவையாகும்,” என்று மத்திய சேமநிதிக் கழகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்