மூத்த அமைச்சர் லீக்கு மே தின உயரிய விருது

2 mins read
99840bfa-3987-45a6-b181-b08c01855e20
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு ‘சீர்மிகு தொழிலாளர் தோழர் விருது’ வழங்கிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே. தனலெட்சுமி. - The Straits Times

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு தொழிலாளர் இயக்கத்தின் உயரிய மே தின விருது வழங்கப்பட்டு உள்ளது.

நாற்பது ஆண்டு காலமாக தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த அரும்பணி ஆற்றியதைக் கௌரவிக்கும் விதமாக திரு லீக்கு அந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

‘சீர்மிகு தொழிலாளர் தோழர் விருது’ என்னும் அதனை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே. தனலெட்சுமி திரு லீக்கு வழங்கினார்.

1963ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த உயரிய விருது இதற்கு முன்னர் எழுவருக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூரின் நிறுவனப் பிரதமர் லீ குவான் யூ, முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் லீ போன்றோர் அவர்களுள் அடங்குவர்.

மரினா பே சேண்ட்ஸ், மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு லீ உள்ளிட்ட 180 பேருக்கு மே தின விருது வழங்கப்பட்டது.

தொழிலாளர் இயக்கத்திற்கு அளப்பரிய, தனித்துவப் பங்காற்றியோருக்கு ஆக உயர்ந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக என்டியுசி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய திருவாட்டி தனலெட்சுமி, “திரு லீ தமது நீண்டகால பொதுச் சேவையில் சிங்கப்பூரர்களின், நமது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்த அர்ப்பணிப்பை வழங்குவதில் உறுதியாக நின்றவர். ஒவ்வொரு தொழிலாளியும் முக்கியம் என்னும் என்டியுசியின் கொள்கைக்கு உருவம் தந்தவர் சகோதரர் லீ,” என்று பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு, விருதுபெற்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உடன் பணியாற்றுவார், தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள் உள்ளிட்ட 1,200க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

“முத்தரப்புப் பங்காளித்துவம் என்பது நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகிய மூன்றுக்கும் இடையிலான மும்முனை உறவு. அது சிங்கப்பூரைத் தனித்தோங்கச் செய்கிறது. சிரமங்களை எதிர்கொள்ளும்போது தொழிலாளர்கள் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க அது கைகொடுக்கிறது,” என்றார் திருவாட்டி தனலெட்சுமி.

குறிப்புச் சொற்கள்