அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை மார்ச் 25ஆம் தேதி முதல் சரிபார்க்கலாம்.
அண்மைய திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,758,095 என்று தேர்தல் துறை மார்ச் 24ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2020ல் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டிலிருந்து, இது 104,153 தகுதிபெற்ற வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு.
பிப்ரவரி 1, 2025 நிலவரப்படி தேர்தல் தொகுதி எல்லைகளின் அடிப்படையில் தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுக்கப்பட்டதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
“தேர்தல் தொகுதி எல்லைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுடன், தேர்தல் துறை தற்போது கூட்டு வாக்காளர் பதிவேடுகளைத் தயாரித்து வருகிறது,” என்று அறிக்கை கூறியது.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தொடர்புடைய வாக்காளர் வட்டாரம் அல்லது வட்டாரங்களை அதன் புதிய தேர்தல் தொகுதிக்கு மாற்றுவதன் மூலம் கூட்டுப் பதிவேடுகள் தொகுக்கப்படுகின்றன.
“வாக்காளர்கள் தங்கள் விவரங்களைப் பதிவேடுகளில் சரிபார்ப்பதற்கு முன்பு, கூட்டு வாக்காளர் பதிவேடுகளின் சான்றிதழ் குறித்த தேர்தல் துறையின் அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று தேர்தல் துறை கூறியது.
“இடைப்பட்ட காலத்தில், தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன்னர், தேர்தல் பிரிவுகளின் அடிப்படையில் பதிவேடுகளில் தங்கள் விவரங்களை இன்னும் சரிபார்க்க விரும்புவோர் மின்னணு முறையில் அவ்வாறு செய்யலாம்,” என்றும் தேர்தல் துறை விவரித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்கள் தேர்தல் துறையின் இணையத் தளத்திலோ அல்லது ‘மை புரோஃபைல்’ (My Profile) என்பதன் கீழோ வாக்காளர் சேவைகளைப் பயன்படுத்தி, சிங்பாஸ் செயலி மூலம் உள்நுழையலாம்.
மின்னணு முறையில் பதிவேடுகளில் தங்கள் விவரங்களைச் சரிபார்க்க முடியாதவர்கள், எந்த சமூக நிலையம் அல்லது மன்றம் அல்லது சர்விஸ்எஸ்ஜி நிலையம் அல்லது தேர்தல் துறை அலுவலகத்திலும் அவ்வாறு செய்யலாம் என்று தேர்தல் துறை விளக்கியது.
இருப்பினும், அவர்கள் தேர்தல் துறையின் இணையத்தளம் மூலமாகவோ அல்லது 1800-225-5353 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ ஒரு மின்-சந்திப்பு முன்பதிவை செய்ய வேண்டும்.
இணையத்தில் சரிபார்க்க முடியாத வெளிநாட்டு சிங்கப்பூரர்கள், வெளிநாட்டுப் பதிவு மையங்களாகச் செயல்படும் சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
ஏப்ரல் 2020ல் அங்கீகரிக்கப்பட்ட பதிவேட்டில் 2,653,942 வாக்காளர்கள் இருந்தனர். மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஜூலை மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
2015ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி தேர்தலுக்கு முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் வாக்காளர் பதிவேட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ஆம் தேதி வாக்காளர் பதிவேடு அங்கீகரிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள், வாக்களிப்பு நாள் மே 7ஆம் தேதி நடைபெற்றது.

