சிங்கப்பூரில் மேயர்களின் பணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தள ஆலோசகர்களின் பணியிலிருந்து வேறுபட்டது. மொத்த வட்டாரத்தின் தேவைகளையும் கவனத்தில் கொள்கிறார்கள். தொகுதியளவில் மட்டும் கையாளமுடியாத பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க சமூக, மேம்பாட்டு மன்றங்களும் மேயர்களும் முக்கியம் என்று மத்திய மாவட்ட மேயர் டெனிஸ் புவா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) கூறினார்.
மேயர் பதவி தேவையற்றது என எதிர்க்கட்சியினர் கருத்துரைத்துள்ள வேளையில், அப்பதவியின் தேவை குறித்து தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோவும் மத்திய சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) மேயர் டெனிஸ் புவாவும் விளக்கியுள்ளனர்.
பாட்டாளிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், “சமூக மேம்பாட்டு மன்றங்கள் முன்பு கையாண்ட பொறுப்புகள் பலவும் சமூக சேவை அலுவலகம் போன்ற அமைப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதனால், மேயர்களுக்கு ஆண்டுக்கு $660,000 சம்பளம் கொடுக்கவேண்டியதில்லை. மேயர் எனும் பதவியே தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதியளவில் மட்டும் கையாளமுடியாத பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க சமூக, மேம்பாட்டு மன்றங்களும் மேயர்களும் முக்கியம் என்று திருவாட்டி புவா கூறியுள்ளார்.
“சமூக மேம்பாட்டு மன்றம்தான் சிடிசி பற்றுச்சீட்டுகளை உருவாக்கிய அமைப்பு எனப் பலருக்கும் தெரியும். அதையும் தாண்டி, சமூக மேம்பாட்டு மன்றம் பலவற்றையும் செய்கிறது. பல திட்டங்களுக்கும் மேயர்கள் தலைமை தாங்குகின்றனர். எடுத்துக்காட்டாக, மத்திய வட்டாரத்தில் நாம் 52 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார் திருவாட்டி புவா.
“மேயர்களின் பணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தள ஆலோசகர்களின் பணியிலிருந்து வேறுபட்டது. நாங்கள் மொத்த வட்டாரத்தின் தேவைகளையும் கவனத்தில் கொள்கிறோம். அமைப்புகள், நிறுவனங்களிடமிருந்து வளங்களைத் தேடி, அவற்றுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம், இந்த வட்டாரத்தையும் தாண்டி, மற்ற வட்டாரங்களிலும் செயல்படுத்தக்கூடிய வகையில் திட்டமிடுகிறோம்,” என்றும் அவர் விளக்கமாகக் கூறினார்.
சிறப்புத் தேவைகள் உடையவர்களைக் கொண்டாடும் ‘பர்ப்பள் பரேட்’, ‘பர்ப்பள் சிம்ஃபனி’ எனச் சிறப்புத் தேவைகள் கொண்டவர்களும் கொண்டிராதவர்களும் சேர்த்து 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் உள்ளடக்கிய இசைக் குழு போன்றவற்றை மத்திய சமூக மேம்பாட்டு மன்றம் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“மத்திய வட்டாரத்தில் மக்கள் மூப்படைந்துவருகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது. வேலைகளின் நிலைத்தன்மையும் குறைந்துள்ளது. குடும்ப அமைப்புகள் மாறியுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு இடையில், குடியிருப்பாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் சமூக மேம்பாட்டு மன்றங்கள் பங்காற்றலாம்,” என்றும் திருவாட்டி புவா சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
முக்கியப் பங்கு: ஜோசஃபின் டியோ
“நம் தொகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் தன்மைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புதிய குடியிருப்பாளர்கள் வரும்போதும் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது. அப்போது, சமூக மேம்பாட்டு மன்றங்கள், மற்ற தொகுதிகளில் உள்ள சிறந்த வழிமுறைகளைப் பகிர்ந்து, இந்தப் புரிதலை விரைவுபடுத்துகின்றன,” என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ விளக்கினார்.
யோசனைகளைச் செயலாக்குவதற்கும் தேவையான வளங்களைப் பெறுவதற்கும் சமூக மேம்பாட்டு மன்றங்களின் பங்கு முக்கியம் என்றார் அவர்
“இதனால், குடியிருப்பாளர்கள் பயனடைகின்றனர். ஒருபுறம் நாடாளுமன்ற உறுப்பினரின் உத்வேகமும் மறுபுறம் சமூக மேம்பாட்டு மன்றங்கள், மேயர்களின் அறிவுப் பகிர்தலும் ஆதரவும் கிடைக்கின்றன,” என்றும் திருவாட்டி டியோ கூறினார்.