நான்கு வயது சிறுமி மேகன் கங் துன்புறுத்தப்பட்டதை காணொளியாகப் பதிவு செய்து, அவரது உடலை மறைக்க உதவிய நுவெல் சுவா ருவோஷி என்பவரின் இளம் மகள், தற்போது சுவா குடும்பத்தினரின் பராமரிப்பில் உள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) இதனைத் தெரிவித்தார்.
சுவாவின் மகளுக்குத் தற்போது 10 வயதாகிறது என்று அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார். அதன்படி, அவர் மேகனை விடச் சற்று இளையவர் ஆவார். 2015, அக்டோபர் 4ஆம் தேதியன்று பிறந்த மேகன், இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 11 வயது ஆகியிருக்கும்.
2020ஆம் ஆண்டில் மேகனின் விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு, சுவாவின் மகள் சமூக சேவைகள் அமைப்புகளின் கவனத்திற்கு வந்திருக்கவில்லை என்றும், சுவா கைது செய்யப்பட்ட பிறகு அந்த மகள் அவரது நேரடிப் பராமரிப்பில் இல்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
நவம்பர் 13 அன்று, மேகனின் மரணத்தில் தொடர்புடையதற்காக சுவாவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேகனைத் துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தில், அந்தச் சிறுமியின் தாயார் ஃபூ லி பிங், அவரது காதலன் வோங் ஷி ஷியாங் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதை சுவா ஒப்புக்கொண்டார்.
2025, ஏப்ரலில், ஃபூவுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வோங்குக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 17 பிரம்படிகளும் வழங்கப்பட்டன.
மேகன் இறப்பதற்கு ஓர் ஆண்டுக்கும் மேலாக பயங்கரமான உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கில் சிங்கப்பூரின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பல குறைபாடுகள் வெளிப்பட்டன.
சுவாவின் வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ். மோகன், அவரை ஒரு செயலற்ற பார்வையாளராகக் கருத முடியாது என்றும், அவர் தனது மனசாட்சிக்கு மாறாக, குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதையும், பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பதையும் தேர்ந்தெடுத்தார் என்றும் கூறினார்.
தான் தனது சொந்த மகளின் ஆடைகளை மேகனுக்கு அணியக் கொடுத்ததாகவும், அவ்வப்போது மேகனை மாடத்தில் இருந்த செடி வளர்க்கும் பெட்டியிலிருந்து வெளியே விட்டதாகவும் சுவா குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதன் மூலம் அவர் தனது குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க முயன்றதாகத் தெரிவித்தார்.
