சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்த ஒருவருக்குத் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அந்தப் பயணிக்கும் சிங்கப்பூரில் உள்ள மற்ற தட்டம்மை சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூரில் தொற்று நோய்களைச் சமாளிக்க ஆணைபெற்ற தொற்றுநோய் அமைப்பு (சிடிஏ) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 9ஆம் தேதியன்று கம்போடியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த அந்தப் பயணி, ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் சாங்கி விமான நிலையத்தில் காத்திருந்து, பின்னர் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குச் சென்றுள்ளார். அவருக்குத் தென்பட்ட அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அவர் விமான நிலையத்தின் மாற்றுப் பயணப் பகுதியிலேயே இருந்ததால், சிங்கப்பூரில் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு.
2026ஆம் ஆண்டில் இதுவரை சிங்கப்பூரில் 14 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பிப்ரவரி மாதத்திலேயே ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
சிங்கப்பூரில் வசிக்கும் 99 விழுக்காடு பெரியவர்களுக்குத் தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதுகுறித்து அதிகக் கவலைப்படத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தட்டம்மை என்பது காற்று மற்றும் நேரடித் தொடர்பு மூலம் பரவக்கூடிய கிருமித்தொற்று ஆகும். காய்ச்சல், இருமல், சளி மற்றும் தோல் அழற்சி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். இதற்குச் சிறப்பு சிகிச்சை ஏதுமில்லை. பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்களில் குணமாகிவிடும். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது மூளை வீக்கம் போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

