சிங்கப்பூரில் இவ்வாண்டு 40 பேரைத் தட்டம்மை தொற்றிவிட்டதாகத் தொற்றுநோய் அமைப்பின் ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாண்டுதான் ஆக அதிக அளவில் தட்டம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது
கடந்த ஆண்டு மொத்தம் 27 பேரைத் தட்டம்மை தொற்றியது. இந்த எண்ணிக்கையும் 2020ஆம் ஆண்டில் பதிவானதைவிட அதிகம்.
இவ்வாண்டு தட்டம்மை பாதித்தோரில் குறைந்தது மூவர் அதற்கெதிரான இரண்டு தடுப்பூசிகளைப் போட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட எஞ்சியோர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை அல்லது தடுப்பூசி போட்டதற்கான பதிவுகள் எதுவும் இல்லை.
தட்டம்மையால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 25 வயதிலிருந்து 44 வயதுக்கு உடப்பட்ட பெரியவர்கள்.
இவ்வாண்டு ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து ஜூலை 4ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 12 பேரைத் தட்டம்மை தொற்றியது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர், 11 பேர் சிங்கப்பூர்வாசிகள். அந்த 12 பேரில் இருவர் தடுப்பூசி போட்டிருந்தனர்.
இதற்கிடையே, அனைத்துலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். எனவே, சிங்கப்பூருக்குத் தட்டமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வருவோரால் இங்கும் அந்த பாதிப்பு கூடியது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரில் தட்டம்மைத் தொற்று அவ்வப்போது தலைதூக்கினாலும் பெருந்தொற்றாக அது உருவெடுப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்ற வல்லுநர்கள, சிங்கப்பூரில் தடுப்பூசிப் போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகம் என்பதைச் சுட்டினர்.
சிங்கப்பூரில் ஏழு வயதை எட்டுவதற்குள் பிள்ளைகளில் கிட்டத்தட்ட 97 விழுக்காட்டினர் தட்டம்மைக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்கின்றனர். பெரியவர்களில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டினரிடம் தட்டம்மையை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று சுகாதார அமைச்சு சுட்டியது.

