தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
செப்டம்பர் 1ஆம் தேதி நடப்புக்கு வருகிறது

குழந்தைகள் உள்ள வீடுகளில் இல்லப் பணிப்பெண்கள் தட்டம்மை எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது கட்டாயம்

2 mins read
366f9d52-b367-46cd-87b2-91d91f0ba78e
உலக அளவிலும் வட்டார அளவிலும் தட்டம்மைப் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், பொதுச் சுகாதாரத்துக்கு அது தொடர்ந்து மிரட்டலாக விளங்குகிறது. - படம்: ஏஎஃப்பி

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து, தட்டம்மைக்கு எதிரான முழுமையான தடுப்பாற்றலை வழங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, 7 வயது நிரம்பாத குழந்தைகளைக் கொண்ட வீடுகளில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் (migrant domestic workers) அந்நோய்க்கு எதிரான தடுப்பாற்றல் பெற்றிருப்பதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டியது கட்டாயம்.

மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கை பொதுச் சுகாதார மீள்திறனை மேம்படுத்தும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளைப் பாதுகாக்கும் என்றும் அமைச்சு கூறியது.

அத்தகைய குழந்தைகளுக்குத் தட்டம்மைத் தொற்றால் கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் இருப்பதை அது சுட்டியது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல், புதிய வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கு வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் தற்போது பணியிலிருப்போரின் வேலை அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்கும்போதும், அவர்களுக்குத் தட்டமைக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டதா எனும் விவரத்தை 7 வயது நிரம்பாத குழந்தைகளைக் கொண்டுள்ள முதலாளிகள் தெரிவிக்க வேண்டும்.

தங்கள் குழந்தைக்குத் தட்டமைக்கு எதிரான முழுமையான தடுப்பாற்றலைத் தரும் தடுப்பூசி போடப்பட்டதா என்பதையும் இல்லப் பணிப்பெண்ணுக்கு அந்தத் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவரைச் சந்திப்பதற்குப் பதிவு செய்துள்ளார்களா என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும்.

ஒரு வீட்டில் உள்ள 7 வயது நிரம்பாத குழந்தைகள் அனைவருக்கும் முழுமையான தடுப்பாற்றலுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலோ இல்லப் பணிப்பெண் ஏற்கெனவே தட்டமைக்கு எதிரான தடுப்பாற்றலைப் பெற்றவராக இருந்தாலோ அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடத் தேவையில்லை.

ஏற்கெனவே தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலோ ஒருவரின் உடலுக்கு அந்நோய்க்கு எதிரான தடுப்பாற்றல் கிடைக்கும்.

இது தொடர்பான ஆதாரங்களை, இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்தும் முதலாளிகள் மனிதவள அமைச்சுக்கு வழங்கலாம். தடுப்பூசிச் சான்றிதழ், ஏற்கெனவே பாதிக்கப்பட்டதை உறுதிசெய்யும் ஆய்வுக்கூடப் பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை அவர்கள் சமர்ப்பிக்கலாம்.

தட்டம்மைக்கு எதிரான முழுமையான தடுப்பாற்றலைப் பெற ஒருவருக்கு அதற்கான தடுப்பூசிகள் இருமுறை போடப்பட வேண்டும். சிங்கப்பூரின் பொது மருந்தகங்களில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். இருமுறை போடப்படும் தடுப்பூசிகளுக்கு மொத்தம் $80 முதல் $140 வரை செலுத்த வேண்டியிருக்கும்.

இல்லப் பணிப்பெண்ணுக்கு இந்தத் தடுப்பூசி போடுவதற்கான செலவை முதலாளியே ஏற்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

7 வயது நிரம்பாத குழந்தைகளைக் கொண்ட முதலாளிகள், தட்டம்மைக்கு எதிரான தடுப்பாற்றல் இல்லாத பணிப்பெண்ணை வேலையில் அமர்த்தியதாகத் தெரியவந்தால், அவர்கள் தடுப்பூசிச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்வரை வேலை அனுமதிச்சீட்டு தொடர்பான உரிமைகளைத் தற்காலிமாக இழக்க நேரிடும்.

குறிப்புச் சொற்கள்