வேலைவாய்ப்புக்கு உதவும் நடவடிக்கைகள்: ஈடுபடுவோருக்கு வழங்கீட்டுத் தொகை

2 mins read
7b7f9c79-08f7-4dae-accb-5fbfae356c68
தகுதியுடைய வேலை விண்ணப்பதாரர்கள் வேலை தொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் ஆறுமாத காலத்துக்கு $6,000 வரை பெறலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்களது விருப்பத்துக்கு மாறாக வேலையிழப்போர் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மாத வழங்கீட்டுத் தொகையைப் பெறும் தகுதி பெறுவர்.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஜாப்சீக்கர் சப்போர்ட் ஸ்கீம்’ என்ற இந்தத் திட்டத்துக்கு என $200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவுள்ளது.

இதில் தகுதியுடைய வேலை விண்ணப்பதாரர்கள், வேலைப் பயிற்சி, பொருத்தமான வேலை பற்றிய தேடுதலில் ஈடுபடுவது போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் ஆறுமாத காலத்துக்கு $6,000 வரை பெறலாம் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தங்களது விருப்பத்துக்கு மாறாக வேலையிழந்த 60,000 பேருக்கு ஓர் ஆண்டில் உதவும் என்று அமைச்சர் கூறினார்.

ஆட்குறைப்பைத் தவிர, உடல்நலன், காயம், விபத்து, நிறுவனம் மூடப்படுதல் போன்ற பல காரணங்களால் ஒருவர் வேலையிழக்கலாம். அவர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டம் உதவும் என்று அவர் விளக்கினார்.

“வேலை தேடுவோர் வேலைவாய்ப்புக் கண்காட்சி, தங்கள் வேலை அனுபவக் குறிப்பை முழுமைப்படுத்துவது, வேலைப் பயிற்சிக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக வேலை தேடி வருவோருக்கு ஆலோசனை வழங்கப்படும்.

மேலும், வேலையிழந்தோர் சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நடத்தும் பயிற்சித் திட்டங்கள், வேலைக் கண்காட்சி போன்றவற்றிலும் பங்குபெற்று பலனடையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மனிதவள அமைச்சின் ஒதுக்கீடு பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் கோ, இந்தத் திட்டம் நிதி வழங்கீடு, வேலைவாய்ப்பு பற்றியது மட்டுமல்ல,” என்றார்.

இந்தத் திட்டம் வேலை தேடுவோர் மீண்டும் வேலைச் சந்தையில் தன்னம்பிக்கையுடன் இணைய வகுக்கப்பட்டுள்ள எளிமையான வேலைக் கட்டமைப்பு என்று விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்