ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் லிட்டில் இந்தியாவில் இருக்கும் வீவக வீடுகளின் அடித்தளங்களில் இளைப்பாறுவதை பற்றித் தமக்கு குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளதாகக் கலாசார, சமூக, இளையர் துறை, வர்த்தக, தொழில்துறை அமைச்சு துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
அதற்குத் தீர்வுகாண தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொன்ன மோல்மின்-கேர்ன்ஹில் பிரிவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டான், வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டு நிர்மாணத்திற்கு கடுமையாக உழைப்பதாகவும் ஓய்வு நேரங்களில் இளைப்பாற அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஓய்வெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதாகவும் சொன்னார்.
மசெகவின் தஞ்சோங் பகார் வேட்பாளர்கள், ராடின் மாஸ், குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (27 ஏப்ரல்) ரெட்ஹில் உணவு நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்முரசு கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டான் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்கள் பணிக்குழுவில் இருக்கும் தொண்டூழியர்கள் லிட்டில் இந்தியாவிற்குச் சென்று அங்கிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அவர்களுக்கென வழங்கப்படும் இளைப்பாறும் இடங்களில் ஓய்வு எடுக்கும்படி ஊக்குவித்து வருகின்றனர். நானும் அவர்களுடன் இணைந்து அதில் ஈடுபட்டு வருகிறேன்,” என்று திரு டான் கூறினார்.
பெரிதாகப் பயன்படுத்தப்படாத பல்நோக்கு மண்டபங்களும் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையமும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு டான், பாதுகாப்பை மேம்படுத்தவும் அதிக சத்தம் போன்ற பிரச்சினைகளை விரைவாகக் கையாளவும் கூடுதல் துணைக் காவல் படையையும் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மையில் இதுபற்றித் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த திரு டான், தமக்கு நன்கு அறிமுகமான குடியிருப்பாளர் ஒருவர் தம்மிடம் வந்து இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியதாகவும் தாம் அதற்கான தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டைத் தம் மீது சுமத்தியதாகவும் திரு டான் குறிப்பிட்டிருந்தார்.
குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் மேல் அக்கறைகொண்டுள்ளதாகவும், அவர்களின் கவலைக்குரிய விவகாரங்களுக்குத் தமது பணிக்குழு செவிசாய்த்து வருவதாகவும், வேலைகள் படிப்படியாக நடந்து வருவதாகவும் திரு டான் தமது பதிவில் விளக்கியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுறுத்திய திரு டான், தம்மைப் பற்றித் தவறான முறையில் பேசிய அந்தக் குடியிருப்பாளர், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, தம்முடனும் தமது குழுவுடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட தாம் வரவேற்பதாகவும் திரு டான் கேட்டுக்கொண்டார்.