இன்கம்-அலியான்ஸ் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காகக் காப்பீட்டுச் சட்டத்தைத் திருத்தும் அவசர மசோதா அக்டோபர் 2024ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வழக்கமாக, இதுபோன்ற சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற சிறப்புக் குழு ஆய்வு செய்த பின்னரே நிறைவேற்றப்படும் என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா.
ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில் அவசரமாக மசோதா இயற்றப்பட்டு பின்னர் ஒரே நாளில் மசோதா விவாதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று மார்ச் 3ஆம் தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அமைச்சர் இந்திராணி.
இத்தகைய நடவடிக்கைகள் தேவை எழும்போது மட்டுமே அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன என்றும் இனியும் குறைவாகப் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டினார்.
இது தொடர்பாக உரையாற்றிய பாட்டாளிக் கட்சி எம்பி திருவாட்டி சில்வியா லிம் (அல்ஜுனிட் குழுத்தொகுதி), சிறப்புக் குழு விவாதமின்றி இன்றி அவசரமாக மசோதாவை நிறைவேற்றியதால் நாடாளுமன்ற நடைமுறை புறக்கணிக்கப்பட்டது என்று விவாதித்தார்.
“சந்தர்ப்ப சூழ்நிலை அத்தகைய அவசரநிலையை ஏற்படுத்தி இருந்தாலும், இத்தகைய அவசர மசோதாக்கள் இறுதிக் கட்ட நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்,” என்றார் திருவாட்டி லிம்.
அதற்குப் பதிலளித்த நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் திருவாட்டி இந்திராணி, மசோதாக்களை ஆராய்ந்து விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான அவகாசம் தரப்படுவதை அமைப்புமுறை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் ‘அலியான்ஸ் மசோதா’ போன்ற அரிய, வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிங்கப்பூரர்களின் நலன் கருதி விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்கும் அவசியம் ஏற்படுவதாக அமைச்சர் இந்திராணி சொன்னார்.

