போலி ஹலால் சின்னத்தைப் பயன்படுத்திய இறைச்சி, மீன் இறக்குமதியாளருக்கு அபராதம்

2 mins read
76c3f817-8732-4862-a3de-0aaf7bf9cf90
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாத்து இறைச்சிக்கான ஹலால் சான்றிதழ் போலியானது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு, முயிஸ்

‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு அமைப்புகளுக்குப் போலியான ஹலால் சின்னத்தைக் கொண்ட வாத்து இறைச்சியை விநியோகித்ததற்காக இறைச்சி, மீன் இறக்குமதியாளர் ஒருவருக்கும் அவரது நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

‘யோகோர்ன் ஃபூட் எண்டர்பிரைஸ்’ நிறுவனத்துக்கு $35,000 அபராதமும் அதன் இயக்குநர் வாங் லீஜூனுக்கு $20,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக முயிஸும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாத்து இறைச்சிகளுக்கு வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் சந்தேகத்துக்குரியதாக இருந்ததை முயீஸ் கண்டுபிடித்தது. சீனாவைத் தளமாகக் கொண்ட ஏஆர்ஏ ஹலால் சான்றிதழ் சேவை நிலையம் அந்தச் சான்றிதழை வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், ஒரே விநியோகிப்பாளரான ‘யோகோர்ன்’ அந்த வாத்து இறைச்சியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது. அதற்கான ஹலால் சான்றிதழ் போலியானது என்றும் அதனைத் தான் வழங்கவில்லை என்றும் ஏஆர்ஏ, முயிஸிடம் தெரிவித்தது.

முயிஸ் அதிகாரிகள் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘யோகோர்ன்’ நிறுவனத்துக்குச் சென்றபோது, போலிச் சான்றிதழ் குறித்து தமக்குத் தெரியாது என்று வாங் கூறினார். வாத்து இறைச்சியில் இருந்து போலி ஹலால் சின்னத்தை அகற்றவும், அதனை ஹலால் வாத்து இறைச்சியாகத் தெரிவிப்பதை நிறுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், அதன் பிறகு 2020ஆம் ஆண்டில் அதேபோன்ற மற்றொரு சம்பவம் மீண்டும் நேர்ந்தது. மூயிஸ் மறுபடியும் ‘யோகோர்ன்’ நிறுவனத்துக்குச் சென்று வாத்து இறைச்சிகளை ஹலால் சின்னங்களுடன் விற்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது.

முயிஸ் பலமுறை கூறியும், வாங், ஹலால் அற்ற வாத்து இறைச்சியைத் தொடர்ந்து ஹலால் சின்னத்துடன் விற்றதால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அவர் மீது குற்றஞ்சாட்டியது.

இத்தகைய குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு $10,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்