செம்பவாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 73 வயது லாத்தீஃபா ஹுசைன் கான். இவர், உடற்குறையுள்ள இரு மகன்களுக்குத் தாயார். இவருடைய இளைய மகன் ஆறு மாதங்களுக்குமுன் உயிரிழந்தார்.
இவரது 78 வயது கணவர் நடக்கச் சிரமப்படுவதுடன் மறதிநோயாலும் பாதிக்கப்பட்டவர்.
வீட்டில் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. ஆனால், மகனைப் பார்த்துக்கொள்ள இல்லப் பணிப்பெண்ணுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்.
தன் சேமிப்புகள், சமூக சேவை அலுவலகத்தின் உதவி போன்றவற்றைக் கொண்டு லாத்தீஃபா செலவுகளைச் சமாளிக்கிறார். எனினும், எல்லாவற்றிற்கும் அவர் மிகவும் யோசித்தே செலவிட வேண்டியுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) செம்பவாங் சென்ட்ரலில் ஜாமியா சிங்கப்பூர் வழங்கிய அன்பளிப்புப் பை அவருடைய சுமையைச் சற்று குறைத்தது.
சிங்கப்பூரின் 12 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் இணைந்து பல இன, சமயங்களைச் சார்ந்த 2,300 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை $80 மதிப்பிலான அன்பளிப்புப் பைகளை ஜாமியா சிங்கப்பூர் வழங்கி வருகிறது.
அந்தப் பைகளில் இரண்டு கிலோ இறைச்சி, இரண்டு முழுக் கோழிகள், ரண்டாங் பேஸ்ட், ‘கட்டுப்பாட்’ (instant ketupat), நோன்புப் பெருநாள் குக்கீஸ் ஆகியவற்றுடன் சமையலுக்கான இதர பொருள்களும் உள்ளன.
மொத்தம் 32,000 கிலோ எடை கொண்ட, $184,000 மதிப்பிலான உணவும் சமையல் பொருள்களும் விநியோகப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஒன்பதாம் ஆண்டாக இம்முயற்சியை ஜாமியா சிங்கப்பூர் மேற்கொள்கிறது.
நாடாளுமன்றத் தொகுதிகளோடு இணைந்த முயற்சி
பயனடையும் 2,300 குறைந்த வருமானக் குடும்பங்களில் 714 குடும்பங்கள் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் மூலம் பயன்பெறுபவை. மற்ற 1,586 குடும்பங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையிலானவை.
அவ்வகையில், மார்ச் 23ஆம் தேதி செம்பவாங் சென்ட்ரலில் புளோக் 312ல் மக்கள் கழகம் ஏற்பாடு செய்த சமூக இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏறக்குறைய 200 பயனாளர்களுக்கு ஜாமியா சிங்கப்பூர் இந்த அன்பளிப்புப் பைகளை வழங்கியது.
சுகாதார அமைச்சரும் செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓங் யி காங் மக்களுடன் இஃப்தாரில் கலந்துகொண்டார். ஜாமியா சார்பில் அன்பளிப்புப் பைகளையும் அவர் வழங்கினார்.
இதற்குமுன் மார்ச் 7ஆம் தேதி மற்றொரு சமூக இஃப்தாரும் செம்பவாங் சென்ட்ரலில் நடைபெற்றது.