தேசிய சேவைக்காகக் காத்திருப்போரில் 73 பேருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்களுக்கு மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தின் மத்திய மனிதவளத் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட முறையில் சோதனை நடத்தப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறை தொடர்பான தகவல் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மருத்துவச் சோதனைக்குப் பிறகு ‘ஃபிசிக்கல் எம்பிளாய்மென்ட் ஸ்டாண்டர்டு’ (PES) முறை இருக்காது.
புதிய முறையின் அடிப்படையில், சேவையில் சேரவிருப்போர் ஒரே ஒரு ‘பெஸ்’ மதிப்பீட்டிற்குப் பதிலாக மூன்றுவிதமான மதிப்பீடுகளைப் பெறுவார்கள். மருத்துவ ரீதியான தகுதி அல்லது தகுதியின்மை, உடல் செயல்பாட்டுத் திறனை விளக்கும் குறிப்பிட்ட மருத்துவ விலக்குகள், எட்டு வாரச் சேவைக் குறைப்பிற்கான தகுதி ஆகியவை அதில் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறை குறித்து 73 பேரிடமும் விளக்கப்பட்டது.

