என்றும் இளமையாக இருப்பவர்களைத் தொன்மக் கதைகளில்தான் தேட முடியும் எனப் பலர் நினைக்கக்கூடும். சரியான பழக்க வழக்கங்களால் இதனை ஒரளவு உண்மையாக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டீன் ஹோ, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தனது உயிரியல் வயதை 15 ஆண்டுகள் வரை குறைத்துக் காட்டியுள்ளார்.
என்யுஎஸ் மருத்துவ அமைப்பின் ‘விஸ்டிம்’ எனப்படும் மின்னிலக்க மருத்துவக் கல்வி நிலையத்தின் இயக்குநரான பேராசிரியர் ஹோ, வாழ்நாளை நீட்டிப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றுக்குத் தலைமை தாங்கினார்.
‘டெல்ட்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு பற்றிய அறிக்கை ‘பிளாஸ் ஒன்’ எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. 2024 ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
47 வயது பேராசிரியர் டீன் ஹோ, இந்த ஆய்வுக்காகப் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
அதில் தினமும் 20 மணி நேரம் உண்ணாமல் இருப்பது, தொடர்ச்சியாக 48 மணி நேரம் உண்ணாமல் இருப்பது போன்ற இடைவெளி விட்டு உண்ணாமல் இருக்கும் முறைகள் உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும்.
நாள்தோறும் அவர் காலையில் 90 நிமிடங்கள் வலிமைப் பயிற்சிகள் அல்லது சுறுசுறுப்பு தேவைப்படும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
பேராசிரியர் டீன் ஹோவின் உணவில் முக்கியமாகக் கீரை வகைகள், விதைகள், ஆலிவ் எண்ணெய், கொழுப்பில்லாத புரதம் உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன.
பானங்களைப் பொறுத்தவரை அவர் தண்ணீர், எலக்ட்ரோலைட் பானங்கள், பால், சர்க்கரை சேர்க்காத கருப்பு காப்பி, தேநீர் ஆகியவற்றை மட்டுமே அருந்துகிறார்.
பேராசிரியர் டீன் தமது உடலில் ‘வூப்’, ‘கார்மின்’, ‘ஆப்பிள் வாட்ச்’ஆகிய மூன்று உடல்நல அளவீட்டுச் சாதனங்களைக் கிட்டத்தட்ட் எட்டு மாதங்களாக அணிந்திருந்தார். இதன் வழியாக, வழக்கமான அறிக்கைகளை விட நீண்ட கால மாற்றங்களைக் கண்காணிக்க முடிந்ததாக என்யுஎஸ் தெரிவித்தது.
இந்த ஆய்வின் அண்மைய அறிக்கையின்படி, 47 வயதான அவரது உடலின் ‘மெட்டபாலிிக் சுவிட்ச்சிங் ஸ்பீட்’ (Metabolic switching speed - சர்க்கரையை எரிப்பதில் இருந்து கொழுப்பை எரிப்பதற்கு உடல் மாறும் வேகம்) 24 மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நிலையில் இருந்து 16.5 மணி நேரமாகக் குறைந்துள்ளது. அவரது வயதில் உள்ள ஒருவருக்கு இந்த வேகம் பொதுவாக 36 முதல் 72 மணி நேரமாக இருக்கும்.
மேலும், அவரது ஓய்வு நேர இதயத் துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 65லிருந்து 46ஆகக் குறைந்துள்ளது. இது மேம்பட்ட இதய இயக்கம், சிறந்த உடல் மீள்திறன் ஆகியவற்றைக் காட்டுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
கூடுதலாக, இந்த ஆய்வின் மூலம் பேராசிரியர் ஹோ சிறந்த தூக்கத்தையும் பெற்றுள்ளார். அவரது தூங்கும் நேரம் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரமாக உயர்ந்தது. இரவில் விழித்திருக்கும் நேரம் குறைந்து, ஆழ்ந்த தூக்கம் அதிகரித்தது.
நள்ளிரவில் வழக்கமாகத் தூங்கும் அவரால் இப்போது முன்கூட்டியே இரவு 9 மணி அளவில் தூங்கச் செல்ல முடிந்தது.
மேலும், ஆராய்ச்சிக்குழுவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் செயலியின் கணக்கீட்டின்படி, பேராசிரியர் டீனின் உடலியல் வயது (Physiological age) 32 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது அவரது உண்மையான வயதை விடக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இளமையாக உள்ளது.
இந்த முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், இவை பேராசிரியர் டீனின் உடலுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பதிலளிப்புகள் என்பதை என்யுஎஸ் வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு நபரும் இவரது வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் இதுபோன்ற முடிவுகள் கிடைக்கும் என்று கூற முடியாது என்றும் கூறப்பட்டது.
வருடாந்தர சுகாதாரப் பரிசோதனைகளுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் உடலுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்காகவே தாங்கள் இந்த ஆய்வைத் தொடங்கியதாகப் பேராசிரியர் ஹோ கூறினார்.
“பெரும்பாலான மக்கள் வருடாந்தரப் பரிசோதனைகளையே தங்கள் ஆரோக்கியத்திற்கான அளவுகோலாக நம்பியிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற அளவீடுகளைக் கடந்து, உடல் நிகழ்நேரத்தில் எவ்வாறு இயங்குவதுடன் அது எவ்வாறு மாறுகிறது என்பதில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கம்,” என்றும் அவர் கூறினார்.


