சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மூவாண்டு முன்னோடித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
‘மெடிஷீல்ட் லைஃப்’ காப்புறுதிச் சந்தாவைக் குறைக்க அந்தத் திட்டம் உதவுகிறது.
இந்தத் திட்டத்தினால் 54,000க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர். அவர்கள், 1.8 மில்லியன் வெள்ளிக்கு மேல் தங்களுடைய சந்தாக்களில் கழிவுகளைப் பெற்றுள்ளனர்.
நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி சுகாதார அமைச்சு அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பிப்ரவரி 28 நிலவரப்படி சந்தா தள்ளுபடிகளைப் பெற்றவர்களில் 31 விழுக்காட்டினர் ஐம்பது முதல் 59 வயது வரையிலானவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 28 விழுக்காட்டினர் 40 முதல் 49 வரையில் உள்ளவர்கள் என்றும் 26 விழுக்காட்டினர் 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த முன்னோடித் திட்டத்தால் பலர் பலனடைந்துள்ளது ஊக்கமளிக்கிறது என்று அமைச்சு கூறியது.
இல்லத்தரசியான ஏக்னஸ் சூன், 60, கடந்த அக்டோபர் மாதம்முதல் நான்கு முறை தள்ளுபடிகளைப் பெற்றுள்ளார். மொத்தம் அவர் பெற்ற தள்ளுபடியின் மதிப்பு 126 வெள்ளி.
அவர், கடைசியாகச் செலுத்திய 600 வெள்ளி சந்தாவுடன் ஒப்பிடும்போது இது ஒரு கணிசமான தொகையாகும்.
தொடர்புடைய செய்திகள்
“ஓர் இல்லத்தரசியாக எனக்கு அந்தளவுக்கு மெடிசேவ் சேமிப்பு இல்லை. அதனால் வட்டியை ஈட்டுவதற்காக அதனைச் சேமித்து பலதுறை மருந்தகம் அல்லது சிறப்பு வெளிநோயாளி சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறேன்,” என்றார் அவர்.
மெடிஷீல்ட் லைஃப் என்பது தேசிய அளவிலான அடிப்படை காப்புறுதித் திட்டமாகும். அது, மருத்துவமனைகளுக்கான அதிகக் கட்டணங்களையும் சிறுநீரகச் சுத்திகரிப்பு, புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபி போன்ற சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குக் கட்டணங்களையும் செலுத்த உதவுகிறது.
சுகாதார அமைச்சின் முன்னோடித் திட்டத்தின்கீழ் நாற்பது வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் ‘ஹெல்தி 365’ செயலியில் தங்களுடைய சுகாதாரப் புள்ளிகளைப் பயன்படுத்தி சந்தாவுக்கான தள்ளுபடிகளைப் பெற முடியும்.
காப்புறுதி சந்தாதாரர்கள், 75 சுகாதாரப் புள்ளிகளைப் பயன்படுத்தி ஒரு வெள்ளிக்கான தள்ளுபடியைப் பெறலாம்.
சுகாதாரப் புள்ளிகளைப் பெறுவதற்கு செயலியில் உள்ள ஆரோக்கிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளில் அல்லது சவால்களில் பங்கேற்க வேண்டும். ஆரோக்கிய அடையாளச் சின்னம் கொண்ட உணவு, பானங்களை வாங்குவது, உடற்பயிற்சி, தூக்கத்திற்கான இலக்குகளை நிறைவேற்றுவது போன்றவை நடவடிக்கைகளில் சில.
மிதமானது முதல் தீவிர உடல் இயக்க நடவடிக்கைகளில் வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு 70 வெள்ளி மதிப்புள்ள சந்தாக் கழிவுக்கான சுகாதாரப் புள்ளிகளைப் பெற முடியும்.
அது மட்டுமல்லாமல் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ மருந்தகத் திட்டத்தில் பதிவு செய்து முதல் சுகாதார ஆலோசனை திட்டத்தை முடிப்பவர்கள் கூடுதலாக நாற்பது வெள்ளி மதிப்புள்ள சந்தாக் கழிவைப் பெற முடியும்.
அனைத்து நடவடிக்கைகளையும் சவால்களையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 580 வெள்ளி வரை சந்தாவில் தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

