தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தகராறு செய்தோர்மீது புகார் அளிக்கப்போவதில்லை: அமைச்சர் சண்முகம்

2 mins read
அச்சம்பவத்திலிருந்து வெளிவந்து சமூக மேம்பாடு குறித்த ஆக்கபூர்வ விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்கிறார்
eddc6524-efab-4364-8238-8017eaf483b3
குடியிருப்பாளர்களுடன் உரையாடியபோது அங்குள்ள சிறார்களுடன் படமெடுத்துக்கொண்ட உள்துறை, சட்ட அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கா சண்முகம். - படம்: த.கவி

மக்கள் செயல் கட்சி சொங் பாங் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தகராறு செய்த இருவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பான காணொளி இணையத்தில் உள்ளது. இது குறித்து மேன்மேலும் பேசுவதை விடுத்து, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிணைந்து முன்னேறுவது குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள், சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு சண்முகம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்துக் கலாசாரங்களும் அவ்வழிமுறையையே சுட்டுவதாகவும் அவர் சொன்னார்.

காணொளியில் அனைவரது குரலும் தெளிவாக இருப்பதால் இது மக்கள் செயல் கட்சி திட்டமிட்டு‌ச் செய்த நிகழ்ச்சி என்பது போன்ற கருத்துகள் இணையத்தில் உலாவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அது முற்றிலும் தவறான கருத்து என்று சொன்ன அவர், குரல் தெளிவு குறித்துக் குறிப்பிட்டபோது, அது மக்கள் சந்திப்பு என்பதாலும் அதற்குமுன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்று வந்ததாலும், தான் ஒலிவாங்கி (Mic) அணிந்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

தாம் பெற்றோர் தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள்மீது எந்தப் புகாரும் அளிக்கபோவதில்லை என்றும் அவர்களே கற்றுக்கொண்டு மேம்படட்டும் என்றும் திரு சண்முகம் கருத்துரைத்தார்.

“இத்துடன் இச்சம்பவம் முடிவடைந்துவிட்டது,” என்றும் அவர் சொன்னார்.

தாருல் மக்முர் பள்ளிவாசல் தற்காலிகத் தொழுகையிடத்தில் வியாழக்கிமை (மார்ச் 27) நடைபெற்ற நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சண்முகம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழுகை இடத்திற்கான கோரிக்கை எழுப்பப்பட்டதையும், முன்னாள் நார்த் வியூ தொடக்கப்பள்ளி இடத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், இவ்வாண்டு இறுதியில் அப்பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நோன்புத் துறப்பையடுத்து, நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சண்முகம், வட்டாரக் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், கேரி டான், டெரிக் கோ உள்ளிட்டோரும் அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்