தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேகன் குங் எங்கள் மாணவி, இத்தகைய சம்பவம் இனி நிகழக்கூடாது: பிஎஸ்எஸ்

2 mins read
5756fccf-2318-4ca7-8ee7-b7de4b933cea
மேகன் குங் பயின்ற ஹெல்தி ஸ்டார்ட் குழந்தை மேம்பாட்டு நிலையத்தை ‘பியாண்ட் சோஷியல் சர்வீசஸ்’ எனும் சமூகச் சேவை அமைப்பு நடத்திவருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறுமி மேகன் குங்கின் மரணம் ஒரு துயரச் சம்பவம். இத்தகைய சம்பவம் இனி எப்போதும் நிகழக்கூடாது என்று ‘பியாண்ட் சோஷியல் சர்வீசஸ்’ அமைப்பு (பிஎஸ்எஸ்) வியாழக்கிழமை (அக்டோபர் 23) கூறியுள்ளது.

சிறுமியின் விவகாரம் தொடர்பில் தன்னிச்சை மறுஆய்வுக் குழுவின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து அது அவ்வாறு கூறியது.

மேகன் பயின்ற ஹெல்தி ஸ்டார்ட் குழந்தை மேம்பாட்டு நிலையத்தை பிஎஸ்எஸ் அமைப்பு நடத்திவருகிறது.

நான்கு வயதுச் சிறுமி மேகன், தனது தாயாராலும் (ஃபூ லி பிங்) அவரது அப்போதைய காதலராலும் (வோங் ஷி சியாங்) கிட்டத்தட்ட ஓராண்டாகக் கொடுமைப்படுத்தப்பட்டார். அதன் விளைவாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அச்சிறுமி மாண்டார்.

பள்ளி ஆசிரியர்களும் சமூக சேவை ஊழியர்களும் சிறுமியின் மரணத்துக்கு முன்பாக அவருக்கு உதவ முயன்றதாக பிஎஸ்எஸ் குறிப்பிட்டது.

2019 மார்ச் 19ஆம் தேதி மேகனின் ஆசிரியர் சிறுமியின் உடலில் காயங்களைக் கண்டு, அதுகுறித்துப் பள்ளியிடம் தெரிவித்தார். அன்றே சிறுமியின் தாயார், பாட்டி இருவரையும் தொடர்புகொண்ட அமைப்பு, தற்காலிகப் பராமரிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன்கீழ் சிறுமி பாட்டியுடன் தங்கினார்.

மேகனின் காயங்களை ஆசிரியர் படமெடுத்திருந்தார். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் எடுத்த படங்கள் என்பதால் அவற்றை அழித்துவிடும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இருப்பினும் அவை முக்கியமானவை என்று கருதிய ஆசிரியர் அப்படங்களை அழிக்கவில்லை. பின்னர் காவல்துறை விசாரணையில் அவை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

பள்ளி முதல்வர் விடுமுறை முடிந்து சிங்கப்பூர் திரும்பிய பின்னர், சம்பவம் குறித்து 2019 ஏப்ரல் 5ஆம் தேதி குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உரிய நேரத்திலும் மேலும் விவரமாகவும் தகவல் அளித்திருக்கலாம் என்ற மறுஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பை பிஎஸ்எஸ் ஒப்புக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்