பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திங்கட்கிழமையன்று (மே 5) அனுபவம்வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர் சந்திப்பைத் தொடங்கினர்.
மக்கள் செயல் கட்சி மற்றும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் பேசினர்.
குடியிருப்பாளர் சந்திப்பில் என்னென்ன நடக்கின்றன என்பதை நேரில் காண செய்தியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்ப்பளித்தனர்.
குடியிருப்பாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள், அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு உதவுகின்றனர் என்பதை செய்தியாளர்களால் பார்க்க முடிந்தது.
சுவா சூ காங் குழுத் தொகுதியின் பிரிக்லேண்ட் பிரிவுக்குத் தலைமை தாங்கும் திரு ஜெஃப்ரி சியாவ், குடியிருப்பாளர் சந்திப்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இரவு 8 மணிக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கெல்லாம் குடியிருப்பாளர்களைச் சந்திக்கத் தொடங்கிவிட்டார்.
கூடுதல் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கப்பட்டதாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து குடியிருப்பாளர் சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இரவு 10 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 30 குடியிருப்பாளர்களிடம் திரு சியாவ் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோர் பராமரிப்பு, குடிநுழைவு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரைக் குடியிருப்பாளர்கள் நாடினர்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு தினேஷ் வாசு தாஸ் குடியிருப்பாளர் சந்திப்பைத் தொடங்கினார்.
குடியிருப்பாளர் ஒருவரின் முதிய தாயார் துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் சேர பரிந்துரைக் கடிதம் தந்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவையின் முன்னாள் தலைவர் என்கிற முறையில் தமக்கு இருந்த அனுபவத்தை அவர் பயன்படுத்தினார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம், சிக்லாப் மற்றும் ஃபெங்ஷான் வட்டாரங்களில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
பாட்டாளிக் கட்சியின் திரு கென்னத் தியோங்கும் குடியிருப்பாளர் சந்திப்பைத் தொடங்கினார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட சிராங்கூன் பிரிவுக்குத் தலைமை தாங்கும் திரு தியோங், கிட்டத்தட்ட 10 குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
மோசடி, நகராட்சி போன்ற விவகாரங்கள் குறித்து அவரிடம் உதவி நாடப்பட்டது.
பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பிரதமருமான கான் கிம் யோங்கும் தமது புதிய தொகுதியில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
பொங்கோல் குழுத் தொகுதிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் கைப்பேசி இணைப்பு மோசமாக இருப்பதாகக் குடியிருப்பாளர்கள் சிலர் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
இதற்குத் தீர்வு காண தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் தமது குழு இணைந்து செயல்படும் என்றார் திரு கான்.