தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை மேம்படுத்தும் புரிந்துணர்வுக் குறிப்பு

3 mins read
793dc80a-898f-4f95-8d97-feba554b9b3b
(இடமிருந்து) தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் இயோ வான் லிங், எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நியன் ஹூன் பிங், தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் சாஸில் சஃபி. (பின்னால் நிற்பவர்கள்) தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங். - படம்: சாவ்பாவ்

போக்குவரத்துத் துறை சார்ந்த 20 ஆயிரம் ஊழியர்களைத் திறன் மேம்பாடு, வலுவானப் பணியிடப் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் மூலம் மேம்படுத்தும் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கம், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றுக்கு இடையிலான இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று பீ‌‌‌ஷான் பணிமனையில் கையெழுத்தானது.

இது பங்காளித்துவ அமைப்புகள், அதன் ஊழியர்களை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள எஸ்எம்ஆர்டி நிறுவனத்தை ‘ராணீத் தேனி’ (Queen Bee) அமைப்பாக நியமிக்கும்.

இந்தப் பங்காளித்துவம், ஊழியர்களுக்கான வளர்ச்சி, பயிற்சிக்கான வாய்ப்புகளை என்டியுசியின் நிறுவனப் பயிற்சிக் குழு (Company Training Committe) மூலம் மேம்படுத்தும்.

தொழில்நுட்பப் பயன்பாடு, ஊழியரணியின் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல், அடுத்த மூன்றாண்டுகளில் போக்குவரத்துப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் எஸ்எம்ஆர்டி தமது பங்காளிக் கட்டமைப்பில் உள்ள சிறிய, நடுத்தரத் தொழில்களை ஈடுபடுத்தும்.

புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளர் இங் சீ மெங், எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்குறிப்பில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளரும், தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளருமான இயோ வான் லிங், தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் சாஸில் சஃபி எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நியன் ஹூன் பிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பயிற்சிக் குழு ஏற்படுத்தப்பட்டபோது, அதில் தொடக்கத்திலேயே எஸ்எம்ஆர்டி நிறுவனம் இணைந்தது. அக்குழு இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை மேம்படுத்தியுள்ளது. இந்தப் பங்காளித்துவம் இதனை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும்,” என்றார் நிகழ்ச்சியில் பேசிய தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்.

இது எஸ்எம்ஆர்டி ஊழியர்களை மட்டுமின்றி பொதுப் போக்குவரத்து தொடர்ந்து செயல்பட உதவும் பிற அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த துறைக் கட்டமைப்பையும் மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இதன்மூலம் ஊழியர்களின் திறன் மேம்படும், பணி வாழ்வில் உயர வாய்ப்பளிக்கும், சிறந்த ஊதியத்துடன் பாதுகாப்பான பணிச்சூழலில் பணியாற்றுவதை உறுதி செய்யும்,” என்றும் அவர் சொன்னார்.

இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பின்வழி முதல் ராணித் தேனி நிறுவனமாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங், “பயிலரங்குகள் மூலம் கட்டமைப்பு, அனுபவங்கள் ஆகியவை பகிரப்படும். நிறுவனங்களுக்குப் பயிற்சிக் குழு அமைப்பது, வலுவான சங்க நிர்வாகப் பங்காளித்துவம் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து வழிகாட்டப்படும்,” என்றும் சொன்னார்.

எஸ்எம்ஆர்டி பேருந்துகளுக்கு உணர்வுக்கருவிகள் மூலம் தரவுகளைச் சேகரித்து, செயற்கை நுண்ணறிவின் துணையுடன் பகுப்பாய்வு மேற்கொள்ளும் ‘டெலிமேட்டிக்’ அமைப்பை உருவாக்கினோம். பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பங்களித்தது பெருமை. இக்குறிப்பு மேலும் ஒத்துழைப்புடன் செயல்பட வழிவகுக்கும் என நம்புகிறோம்,” என்றார் ட்என்டி கண்காணிப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஜோ‌ஷ்வா டான்.

போக்குவரத்துக் கட்டமைப்பு மிகப் பெரியது. அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான மேம்பாட்டு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம். இது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனயும் மேம்படுத்தும்,” என்றார் தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் இயோ வான் லிங்.

குறிப்புச் சொற்கள்