மோசடியாகத் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களைச் சமர்ப்பித்து சிங்கப்பூர்ச் சிறைத்துறையை ஏமாற்ற முயன்றது தொடர்பில் ஆடவர் இருவர்மீது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று (மே 23) குற்றஞ்சாட்டப்பட்டது.
டான் சின் லியாங், 62, என்ற ஆடவர்மீது ஒரு குற்றச்சாட்டும் கியூ கி லியொங், 35, என்பவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூர்ச் சிறைத்துறையின்கீழ் உள்ள மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் அவர்கள் இருவரும் செலவுகள் குறித்து மோசடியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை உருவாக்க முற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று வியாழக்கிழமை காவல்துறை தெரிவித்திருந்தது.
அவர்கள் இருவரும் திட்டத்தின் குத்தகைதாரர் பணியமர்த்திய இரண்டு வெவ்வேறு இணை நிறுவனங்களின் ஊழியர்கள்.
பணிகளுக்காகத் தங்கள் நிறுவனங்கள் ஆகக் குறைவான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகச் சிங்கப்பூர்ச் சிறைத்துறையை நம்ப வைக்க அவர்கள் மோசடியான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களைத் தயாரித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்கள் சமர்ப்பித்தது போல கியூ மொத்தம் 11 குத்தகை ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் குத்தகை ஆவணங்கள் குழாய்களையும் நீர் அளவைக் கணக்கிடும் கருவிகளையும் விநியோகம் செய்து பொருத்துவது தொடர்பானவை.
2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை மற்றொரு நிறுவனம் கொடுத்தது போல மூன்று ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை டான் தமது நிர்வாக ஊழியர் மூலம் தயாரித்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆவணங்கள் தீயணைப்புத் தூண்கள், தீயணைப்பாளர்களுக்கான தொடர்புச் சேவைகள் ஆகியவற்றை விநியோகம் செய்து பொருத்துவது தொடர்புடையவை.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் இருவரும் $15,000 பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவ்விரு ஆடவர்களுக்கும் அதிகபட்சம் நாலாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக அபராதமும் விதிக்கப்படலாம்.