குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொன்னான காலம்.
அவ்வகையில் இளஞ்சிறாரின் தொடக்ககாலக் கற்றல் சூழலை வலுப்படுத்தும் நோக்கிலும், இளம் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ‘பேபி பிளேகிட்’ என்னும் புதிய, விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை மெண்டாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
மலாய், முஸ்லிம் சமூகத்தின் கலாசாரமாக அறிவைக் கொண்டாடவும், வாழ்நாள் கற்றலை வாழ்வியலாக்கவும் மெண்டாக்கி முன்னெடுக்கும் முதன்மை இயக்கமான ‘ரைக்கான் இல்மு’ ஏற்பாட்டில், மார்சிலிங் - யூ டீ ஹார்ட்லேண்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் சிறப்புத் தொகுப்பு அறிமுகம் கண்டது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், மெண்டாக்கியின் தலைவருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பெற்றோருக்குச் சிறப்புத் தொகுப்புகளை வழங்கினார்.
சிங்கப்பூரர்கள் நம்பிக்கையுடன் குடும்பத்தை அமைக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும் உதவும் 2026 தேசிய தினப் பேரணி அறிவிப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அமைப்பின் ‘ரெடிசெட்லேர்ன்’ திட்டம், ‘மெண்டாக்கி 2030’ தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுத் தொகுப்பு, 3 வயது வரையிலான சிறாரைக் கொண்ட மலாய்/முஸ்லிம் குடும்பங்களைச் சென்றடையும். ஆண்டுக்கு ஏறத்தாழ 5,000 தொகுப்புகளை விநியோகிக்க மெண்டாக்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, சுகாதார மேம்பாட்டு வாரியம் மெண்டாக்கியின் தொழில்சார் பிரிவைச் சேர்ந்த பாலர்பருவக் கல்வி நிபுணர்களின் ஆலோசனையுடன் சிறப்புத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது
அதில், வீட்டில் கற்றலை ஆதரிக்கப் பெற்றோருக்கான வழிகாட்டிப் புத்தகம், மொழி வளர்ச்சியையும் கற்பனைத் திறனையும் வளர்க்கும் கதைப் புத்தகம், புத்தாக்கமிக்க உரையாடல் தொலைத்தொடர்பை ஊக்குவிக்கும் பொம்மை உட்பட, பிள்ளைகளின் சிந்தனைத்திறன், மொழித்திறன், உடலியக்கத்திறன் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்தும் பல பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
வீட்டில் அன்றாடம் நிகழும் சாதாரண உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவே குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாகப் பெற்றோர் செயல்பட இச்சாதனங்கள் பெரிதும் துணைபுரியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இது பொருள்களின் தொகுப்பு மட்டுமன்று. மெண்டாக்கியின் தொட்டில் முதல் சமூகம் வரையிலான ஆதரவுச் சூழலுக்குள் கால்பதிக்கும் நுழைவு வாயிலாகவும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாட்டி அமீரா நடாஷா, 28, “என் 9 மாதக் குழந்தைக்கு இத்தொகுப்பு மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. தொட்டு, உணர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தை கவனிப்புத் திறனையும், கற்றல் ஆர்வத்தையும் இயல்பாக வளர்த்துக்கொள்ள முடிகிறது,” என்றார்.
இந்தச் சிறப்புத் தொகுப்பு, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கானது. பாலர் பள்ளிப் பங்காளித்துவ அமைப்புகள், மெண்டாக்கி துணை நிலையங்கள், ரைக்கான் இல்மு நிகழ்ச்சிகள், மெண்டாக்கி இணையத்தளம் மூலம் இவைப் படிப்படியாக விநியோகிக்கப்படவுள்ளன.
