சிங்கப்பூரர்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதற்கு ஒரு முக்கியக் காரணம் அளவுக்கதிக மக்கள்தொகையே எனச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் ஏப்ரல் 25ஆம் தேதி பிரசாரக் கூட்டத்தில் கூறியதற்குப் பதிலளித்துள்ளார் ஜாலான் புசார் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் டாக்டர் வான் ரிசால்.
“மனநலப் பிரச்சினைகளை மேலோட்டமாக ஆராய்வது தவறு. அனைவருக்கும் பொருந்தும் ஒரே தீர்வு என ஒன்றுமில்லை,” என்றார் டாக்டர் வான் ரிசால்.
ஏப்ரல் 27ஆம் தேதி அப்பர் பூன் கெங் சந்தையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
“மனநலப் பிரச்சினைகளில் பலவகை உண்டு. ஒரே காரணத்தினால் மனநலம் பாதிப்படைவதில்லை. மேலும். நாம் ஒவ்வொருவரும் மனநலப் பிரச்சினைகளை வெவ்வேறு விதங்களில் கையாள்கிறோம்,” என்றார் அவர்.
டாக்டர் சீ தன் ஏப்ரல் 25ஆம் தேதி பிரசாரக் கூட்டத்தில், “சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகளுக்கான இரு காரணங்கள் விலைவாசி உயர்வும் அளவுக்கதிக மக்கள்தொகையும். செம்பவாங் வெஸ்ட்டைப் பாருங்கள். கட்டடங்கள் மிகவும் நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ளன. சிங்கப்பூரால் தாக்குப்பிடிக்கக்கூடிய மக்கள்தொகையை நாம் ஏற்கெனவே கடந்துவிட்டோம்,” என்று கூறியிருந்தார்.
பிரதமர் வோங் வாக்களிப்பு நாளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு ஏற்ற மக்கள்தொகை குறித்துத் தமது கருத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூர் போன்ற சிறு நாடுகள் வெளிநாட்டவருக்குத் தம் கதவுகளைத் திறந்துவைத்திருப்பதன் அவசியத்தைப் பிரதமர் வோங் பொருளியல் கண்ணோட்டத்திலிருந்து ஏப்ரல் 26ஆம் தேதி பிரசாரக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அதிகரிப்பதிலேயே அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்தக் கூடாது என்றும் டாக்டர் சீ கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து வகையான ஜிடிபி வளர்ச்சியும் நன்மைக்கானதன்று. கிராஞ்சி காட்டை அழித்தால், அதிகம் செலவாகக்கூடிய விவாகரத்து வழக்கைத் தொடுத்தால் அல்லது மனநலப் பிரச்சினைக்காக மருத்துவரைப் பார்த்தால்கூட ஜிடிபி உயரும்.
“அதனால்தான் நாங்கள் பரிந்துரைக்கும் ஒரு குறியீடு, உண்மையான வளர்ச்சிக் குறியீடு. இந்தக் குறியீடு ஜிடிபி மட்டுமன்றி, பருவநிலை மாற்றம், சமூக நலம், மனநலம் போன்றவற்றையும் கருத்தில் கொள்கிறது,” என்றார் டாக்டர் சீ.

