பொருளியல் நலனில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையில், மனநலனில் குறைவான கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி வேட்பாளர் கலா மாணிக்கம்.
பொதுமக்களின் மனநலன் தேசிய அளவில் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
ஈசூன் வட்டாரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் கடைசிப் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
“உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, பல்கலைக்கழகங்கள், வர்த்தங்கள் ஒருபுறம் இருக்கையில் பலரும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் மன அழுத்தத்தில் உழன்று வருகிறார்கள். இவற்றைத் தீர்க்கும் கொள்கைகள் வேண்டும்,” என்றார் அவர்.
நீ சூன் குழுத்தொகுதி வேட்பாளர் ஷெரன் லிம், மசெக புதுமுக வேட்பாளர்களைச் சுட்டிக்காட்டிக் கேள்வியெழுப்பினார்.
“எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள ஹவ்காங் குழுத்தொகுதியில் பணியாற்றிய ஜாக்சன் லாம் தற்போது நீ சூன் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்குத் தோல்வியடைந்ததற்குப் பரிசு இதுவா?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மசெகவுக்குச் செயலாற்றலைவிட விசுவாசம்தான் முக்கியமா எனவும் அவர் சாடினார். இது ஆளுமைகளைத் தாக்குவதன்று; கொள்கைகளை நிலைநிறுத்துவதைப் பற்றியது என்றார் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வசதியான கேள்விகளுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து விடையளிக்க முடியாது என்று அவர் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
நீ சூன் குழுத்தொகுதியில் தாம் தொடர்ந்து உழைப்பதை மக்கள் செயல் கட்சி வேட்பாளரும் உள்துறை, சட்ட அமைச்சருமான கா சண்முகம் ஒப்புக்கொண்டதைச் சுட்டிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி பிலமோன், பதவி இல்லாமலேயே இவ்வளவு செய்ய முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எவ்வளவு செய்ய முடியும் என்று பார்வையாளர்களிடம் கேட்டார்.
தொடர்ந்து, மசெக வேட்பாளர்களின் வெளிப்படைத்தன்மைக் குறைவு குறித்தும் அவர் சாடினார்.
ஒவ்வொரு சிங்கப்பூரரின் குரலையும் ஓங்கி ஒலிக்கவைக்கத் தொடர்ந்து உழைப்போம் என்று கூறினார் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர் ஷரத் குமார்.
எவ்வளவு உழைத்தாலும் வீட்டு விலை, விலைவாசி உயர்வு, வேலையில் நியாயமற்ற போட்டியெனத் தானியங்கிப் படிக்கட்டில் வேகமாக ஏறுவது போன்ற நிலையே நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“உலகிலேயே அதிக செல்வச் செழிப்புள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் மக்களிடையே செல்வ இடைவெளி இருப்பது வருத்தமளிக்கிறது,” என்றார் அவர்.
பணியின்போது உறங்கியது தொடங்கி பல்வேறு கவனக்குறைவுகளுக்காகப் பாதுகாப்பு அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டுமெனச் சொன்னவர்கள் மசெகவினர். அவர்களது அக்கறை சரியானதுதான் என்றாலும், முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் தருணங்களில்கூட மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறங்கியதுண்டு என்று சாடினார் ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி வேட்பாளர் ஒஸ்மான் சுலைமான்.