மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு மனநல உதவி: புதிய ஆதரவு திட்டம் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு மனநல உதவி: புதிய ஆதரவு திட்டம் தொடக்கம்

2 mins read
e6d4b023-60c9-4369-849b-71c1ad440f33
மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்போரின் மனநலனைக் காக்க புதிய ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  - படம்: எஸ்பிஎச் ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகித் தவிக்கும் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே அவர்களின் மனநலப் பாதிப்புகளைக் கண்டறிந்து உதவக்கூடிய புதிய ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் ‘கேரிங்-எஸ்ஜி’ என்ற தொண்டு நிறுவனம், சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 1,200 பராமரிப்பாளர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ள இத்திட்டத்தின்கீழ், கிட்டத்தட்ட 120 ஊழியர்களும் தொண்டூழியர்களும் சிறப்புப் பயிற்சி பெறவுள்ளனர்.

தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகள், இல்ல வருகைகளின்போது, பராமரிப்பாளர்களின் மனநலனை இவர்கள் மதிப்பீடு செய்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வகைப்படுத்தி வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிதமான ஆதரவு தேவைப்படுவோருக்குப் பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் உணர்வுபூர்வமான ஆதரவு அளிக்கப்படும். மேலும், தீவிர மன அழுத்தத்தில் இருப்போருக்குத் தொண்டு நிறுவனத்தின் ‘கேர்வெல்’ திட்டத்தின்கீழ் சமூக சேவை, சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவி கிடைக்கவும் வழிவகை  செய்யப்படும்.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய சட்ட , சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, “பராமரிப்பாளர்களின் மனச்சோர்வு திடீரென ஏற்படுவதில்லை. அது ஓய்வின்மை, சமூக இடைவெளி, தொடர்ந்து சேரும் மன அழுத்தம் ஆகியவற்றால் மெதுவாக உருவாகிறது.

‘’பலர் தாங்க முடியாத இக்கட்டான சூழலை எட்டும்போதுதான் உதவியை நாடுகின்றனர். அதனால்தான் ஆரம்பக்கால ஆதரவு மிகவும் அவசியமாகிறது,” என்று குறிப்பிட்டார்.

சுவா அறக்கட்டளையின் 500,000 வெள்ளி நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சுவா வெய்லிங் பேசுகையில், உதவி பெறும் ஒவ்வொருவரையும் பராமரிக்கும் பொறுப்பேற்றுள்ளோரின் மன நலனும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து இத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்துத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஒற்றைப் பெற்றோரான ஜேம்ஸ் ஓங், தன் 15 மாதக் குழந்தைக்கு வளர்ச்சித் தாமதம் கண்டறியப்பட்டபோது இணையத்தில் ஆதரவுத் திட்டங்களைத் தேடி அலைந்ததாகக் கூறினார். 

“தொடக்கக் காலம்தான் பராமரிப்பாளர்களுக்கு மிகவும் சவாலானது. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அந்த ஆரம்பக் கட்டத்திலேயே இத்திட்டம் தலையிட்டு வழிகாட்டுவது மிகப்பெரிய உதவியாக இருக்கும்”, என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்