வேலை கற்பித்து வழிகாட்டிய அன்புத் தந்தை

வேலை கற்பித்து வழிகாட்டிய அன்புத் தந்தை

3 mins read
மறைந்த தந்தையின் புகழ்பாடும் தனயன்
e27125e4-1fba-45b6-9793-bc47d1a6f14e
நிறுவனச் சின்னத்திலேயே சக்திவேலன் நடராஜா, 39, தம் தந்தையை இடம்பெறச் செய்திருக்கிறார். - படம்: செய்யது இப்ராகிம்

அடுக்குமாடிக் கீழ்த்தளங்கள், நடைபாதைகள், படிக்கட்டுகள் எனக் குடியிருப்புகளின் தூய்மைக்காக உழைத்த துப்புரவுப் பணியாளர் நடராஜா, மறைந்தும் தம் மகன் சக்திவேலனின் மனத்தில் நினைவுகளாக வாழ்ந்து கோலோச்சுகிறார்.

வீட்டில் கண்டிப்பு கலந்து அன்பு காட்டிய திரு நடராஜா, தம் பிள்ளைகளுக்கு வேலை கற்பித்த வழிகாட்டியாகவும் தொழில்நெறி புகட்டிய முதலாளியாகவும் விளங்கினார்.

தந்தையே முதலாளி, தொழிலில் பணம் புரள்கிறது என எதற்காகவும் பிள்ளைகளின் மனத்தில் ஆணவம் வளர அவர் அனுமதிக்கவில்லை என்று 39 வயது சக்திவேலன் நடராஜா தெரிவித்தார்.

கட்டடங்களுக்குச் சாயம் பூசுவதற்கு முன்னர் ஆணிகளைச் சுவர்களிலிருந்து பிடுங்கும் வேலையைச் செய்துவந்த தம் தந்தையின் கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டதை சக்திவேலன் நினைவுகூர்ந்தார்.

“குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார். உழைத்து உயர்ந்த என் தந்தை, பின்னாளில் சொந்தமாகவே துப்புரவு நிறுவனம் ஒன்றை நடத்தினார்,” என்று அவர் கூறினார்.

படிப்படியாக உயர்ந்தவர்

‘எனார்டி டிரேடிங் என்ட் இஞ்சினியரிங்’ (NRT Trading & Engineering Pte Ltd) சுற்றுப்புற நிறுவனத்தின் தலைவராக உள்ள சக்திவேலனின் அலுவலகத்திற்குச் செல்வோர், நிறுவனச் சின்னத்தில் அவரது தந்தையின் முகம் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.

சொந்தத் தொழில் நடத்தியபோது தம் தந்தை ஊழியர்களை நடத்திய விதத்தைக் கண்கூடாகப் பார்த்துப் பலமுறை வியந்ததாகவும் சக்திவேலன் குறிப்பிட்டார்.
சொந்தத் தொழில் நடத்தியபோது தம் தந்தை ஊழியர்களை நடத்திய விதத்தைக் கண்கூடாகப் பார்த்துப் பலமுறை வியந்ததாகவும் சக்திவேலன் குறிப்பிட்டார். - படம்: செய்யது இப்ராகிம்

தொழிலின் ஒவ்வோர் அசைவுக்கும் தம் தந்தையின் படிப்பினைகள் உயிரோட்டம் என்று கூறிய அவர், கடுமையான உழைப்பு மட்டுமன்றிச் சரியாக முடிவெடுக்கும் திறனும் தம் தந்தைக்கு உயர்வு தந்ததாகச் சொன்னார்.

வேலையிடத்தில் துணை ஒப்பந்ததாரராக மாறத் தம் தந்தை அவரது முதலாளியிடம் கேட்டபோது அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகச் சக்திவேலன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

“உழைப்பைப் பயன்படுத்திக்கொண்ட முதலாளி அதற்குரிய பலனைத் தர மறுத்தபோது என் தந்தை வெளியேறினார். பல்வேறு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டப் பாடுபட்டார். ஆனால், பழைய முதலாளியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பின்னர் துணை ஒப்பந்ததாரர் ஆனார்,” என்றாரவர்.

சொந்தத் தொழில் நடத்தியபோது தம் தந்தை ஊழியர்களை நடத்திய விதத்தைக் கண்கூடாகப் பார்த்துப் பலமுறை வியந்ததாகவும் சக்திவேலன் குறிப்பிட்டார்.

“முதன்மை ஒப்பந்ததாரர்கள் பணப் பட்டுவாடாவைத் தாமதப்படுத்தினாலும், என் தந்தை ஊழியர்களைத் தவிக்க விடமாட்டார். ஊழியருக்கும் மாதாமாதம் 1, 15ஆம் தேதிகளில் சம்பளம் வழங்குவதி உறுதியாக இருந்தார். அதற்காக அவர் என் தாயாரின் தங்க நகைகளை அடகு வைத்ததுண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.

மூத்த ஊழியர்கள் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டபோது, அவர்களை உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களுக்குப் பதில் தரைத்தளத்தைத் தூய்மை செய்யும் பணிக்கு மாற்றி, அவர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் வேலைவாய்ப்புடனும் இருப்பதைத் தம் தந்தை உறுதிசெய்ததை சக்திவேலன் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுடன் நடராஜா (வலது).
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுடன் நடராஜா (வலது). - படம்: செய்யது இப்ராகிம்

வாழ்க்கைப் பாடம்

வளரும் பருவத்தில், சக்திவேலனும் அவரது உடன்பிறப்புகளும் தங்கள் தந்தையுடன் இணைந்து, தாழ்வாரங்களைக் கூட்டுவதிலும் தரைகளைத் தேய்த்துக் கழுவுவதிலுமே தங்களது பள்ளி விடுமுறை நாள்களைக் கழித்தனர். அப்போதும்கூட வேலை செய்வது தமது பிள்ளைகள் எனத் திரு நடராஜா யாரிடமும் சொன்னதில்லை.

“சில நேரங்களில் வேலையைச் சரியாகச் செய்யாதபோது ஊழியர்கள் முன்னிலையில் எங்களைக் கடிந்துகொள்வார். தொடக்கத்தில் இதனால் எனக்குக் கோபம் வந்தது. ஆனால் பிறகு, வீட்டில் வேலையைப் பற்றி நினைக்க வேண்டாம் என அறிவுறுத்தியதும் அவர்தான்,” என்று சக்திவேலன் குறிப்பிட்டார்.

2011ல் சக்திவேலன் நிறுவனத்திற்குப் பொறுப்பேற்றார். நிறுவனத்தை மறுசீரமைத்து தற்காலச் சந்தைச் சூழலுக்கு அதனைத் தகவமைத்துக்கொண்டார்.

“நான் பொறுப்பேற்றபோது, இத்துறையிலுள்ளவர்கள் எல்லாரும், “உனது தந்தைக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது,” என்றார்கள். அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்படி ஏதேனும் செய்துவிடுவேனோ என்று நான் தொடக்கத்தில் அஞ்சினேன்,” என்றார் சக்திவேலன்.

தற்போது புத்தாக்கம், சுற்றுச்சூழல் சார்ந்த அங்கீகாரங்கள் பலவற்றை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இரண்டு மகள்களுக்குத் தந்தையான இவர், கூடுதலான அன்பு வார்த்தைகள் மூலம் தந்தையிடம் அன்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்து ஆதங்கப்படுகிறார்.

“என் தந்தையின் உயிர் பிரிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் வார்த்தைகளால் அன்பு பரிமாறி முத்தமிட்டேன். இப்போது என் மகள்களிடம் நான் அன்றாடம் அன்பு காட்டுகிறேன்,” என்றார் சக்திவேலன்.

குறிப்புச் சொற்கள்