தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப்பாடத் திட்டத்தை மேம்படுத்தும் மெண்டாக்கி

2 mins read
cdd7b848-2451-4e98-b25e-0c347b3c6dcb
கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 27) பிடோக் கிரீன் தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்ற மெண்டாக்கி துணைப்பாட வகுப்புகளை மெண்டாக்கியின் தலைவரும் தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது (வலமிருந்து மூன்றாவது) பார்வையிட்டார். அவருடன் முஸ்லிம் விவகாரங்களுக்குத் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிமும் (இடமிருந்து மூன்றாவது) சென்றிருந்தார். - படம்: மெண்டாக்கி

மெண்டாக்கி அதன் துணைப்பாடத் திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டு காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

மெண்டாக்கி துணைப்பாட வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாணவர்களின் பல்வேறு கற்றல் ஆற்றலுக்கு ஏற்பட பாடத்திட்டங்கள் அமைக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளாக மேம்பட மெண்டாக்கி துணைப்பாட வகுப்புகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தைத் தமது துணைப்பாடத் திட்டத்தில் புகுத்த இருப்பதாக மெண்டாக்கி தெரிவித்தது.

பள்ளிப் பாடங்களில் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப மெண்டாக்கி அதன் துணைப்பாடத் திட்டத்தை மேம்படுத்துவதாக மெண்டாக்கியின் தலைவரும் தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது கூறினார்.

“சில பெற்றோரால் தங்கள் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். அத்தகைய மாணவர்களுக்குச் சிறந்த வகையில் உதவி செய்ய விரும்புகிறோம்,” என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 27) பிடோக் கிரீன் தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்ற மெண்டாக்கி துணைப்பாட வகுப்புகளை அவர் பார்வையிட்டார்.

அவருடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிமும் சென்றிருந்தார்.

மெண்டாக்கியின் புதிய அத்தியாயம் தொடங்குவதாக திரு ஸாக்கி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து மெண்டாக்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக திரு ஃபிரோஸ் அக்பர் பொறுப்பு வகிப்பார் என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.

தற்போதைய துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நூரஸ்லிண்டா ஸுபருடன் இணைந்து புதிய துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருவாட்டி எஸ்‌ரீனா இலியாஸ் செயல்படுவார் என்றார் திரு ஸாக்கி.

தலைமைத்துவப் புதுப்பிப்பால் மெண்டாக்கி புதிய உச்சத்தை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்