ஆபத்தான முறையிலும் போதையிலும் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் காப்புறுதி, செல்லுபடியாகும் சாலை வரி இரண்டுமின்றி வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை (ஏப்ரல் 26) தெரிவித்தது.
அந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி300 வகை காரின் சாலை வரி 2024 டிசம்பரில் காலாவதியாகிவிட்டதாக ‘ஒன்மோட்டரிங்’ இணையப்பக்கத்தில் சரிபார்த்ததில் தெரியவந்துள்ளது.
பொங்கோல் ஃபீல்ட், எட்ஜ்டேல் பிளேன்ஸ் சாலைச் சந்திப்பில் மூன்று கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகல் 12.55 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
இதில் காயமுற்ற 34 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
சமூக ஊடகத்தில் வலம் வந்த காணொளி, வெள்ளை நிற கார் ஒன்று போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் செல்வதைக் காட்டியது.
பின்னர் அந்த கார் விபத்துக்குள்ளானது. அதன் முன்பகுதி நொறுங்கி இருந்ததையும் மற்ற இரு கார்களும் மூன்று சக்கரங்கள் கொண்ட சிங்போஸ்ட் மோட்டார்சைக்கிளும் சேதமடைந்து இருந்ததையும் காணொளி காட்டியது.