பங்ளாதேஷ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ‘மெர்சி ரிலீஃப் சிங்கப்பூர்’ அமைப்பு உதவி

பங்ளாதேஷ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ‘மெர்சி ரிலீஃப் சிங்கப்பூர்’ அமைப்பு உதவி

1 mins read
53add950-071c-4779-b733-a46532e025a4
’மெர்சி ரிலீஃப்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் முகம்மது அஷிக் (வலது) வழிநடத்திய குழு, பங்ளாதேஷின் நொவாகாலி மாவட்டத்திற்குச் சென்று கிராமவாசிகளுக்கு உணவுப் பைகளை வழங்கியது. - படம்: மெர்சி ரிலீஃப்

பங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18,000 பேருக்கு உதவி வழங்க அங்குச் சென்றிருக்கும் குழு ஒன்றுடன் ‘மெர்சி ரிலீஃப் சிங்கப்பூர்’ மனிதாபிமான அமைப்பும் சேர்ந்துகொண்டுள்ளது.

‘மெர்சி ரிலீஃப்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் முகம்மது அஷிக்கும் அமைப்பின் அனைத்துலக திட்டங்கள் துறையைச் சேர்ந்த திரு லிம் லெகார்லும் தென்கிழக்கில் உள்ள நொவாகாலி மாவட்டத்தை செப்டம்பர் 9ஆம் தேதி சென்றடைந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 குடும்பங்களுக்கு உணவு, சுகாதார நலப் பைகளை விநியோகிக்க, 14 பேர் அடங்கிய ‘ஹீட் பங்ளாதேஷ்’ எனும் வலுவான குழுவுடன் இணைந்து அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

பங்ளாதேஷின் வடகிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்கள், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட அறிக்கைகளின்படி, 5.2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர் என மதிப்பிடப்பட்டதாக அமைப்பு கூறியது.

ஆக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டு நொவாகாலி, ஃபேனி ஆகியவையாகும். அந்தப் பகுதிகளில் 90% முதல் 95% வரையிலான கிராமப்புற வீடுகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பங்ளாதேஷில் மோசமான வடிகால் அமைப்புமுறையாலும் தொடர் பருவமழையாலும் வெள்ளநீர் அளவு மிக மெதுவாக வடிவதாக அமைப்பு சொன்னது.

இதனால் தண்ணீர், சுகாதார உள்கட்டமைப்புக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறச் சமூகங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்