அதிகாரமும் உருமாற்றமும் ஐநாவுக்கு அவசியம்: சிங்கப்பூர் வலியுறுத்து

அதிகாரமும் உருமாற்றமும் ஐநாவுக்கு அவசியம்: சிங்கப்பூர் வலியுறுத்து

2 mins read
984b0cbd-4232-4dbf-ab14-97c6e2531611
ஐநாவின் 79வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். - படம்: ஐநா/யூடியூப்

அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும் திறனுடன் வருங்காலத்திற்கு ஆயத்தமாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அதிகாரம் பெறவும் உருமாறவும் அவசியம் ஏற்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் வலியுறுத்தி உள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 79வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று சிங்கப்பூரின் அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “சிறிய, வளரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவற்றின் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கவும் ஐநா உருமாற வேண்டியது அவசியம்,” என்றார்.

ஆற்றல் மிகுந்ததாகவும் அதிகம் பயனுள்ளதாகவும் ஐநா மாற உருமாற்றம் அவசியம் என்றார் அவர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் விவியன், சிங்கப்பூர் மேலும் அதிகமான மனிதாபிமான உதவிகளைச் செய்ய மத்திய கிழக்கில் உள்ள பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் என்றார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் சென்ற அவர், சிங்கப்பூரின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முந்திய நாளில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பூசல்கள் தணியும் எனச் சிங்கப்பூர் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளது என்று அப்போது அவர் கூறினார்.

“போரை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாகத் தீர்மானம் இயற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றபோதிலும் அதைச் சார்ந்து செய்ய வேண்டிய பணிகளுக்கான உறுதிப்பாடுகள் வளர்ந்து வருகின்றன,” என்றார் டாக்டர் விவியன்.

காஸா போர் ஓராண்டை நெருங்கும் வேளையில், மக்கள்தொகை மிகுந்த பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அந்த இயக்கத்தின் தலைவரைக் கொன்றுவிட்டன.

அதன் பிறகு லெபனான் மீது படையெடுக்க அது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

உலகளாவிய நெருக்கடி குறித்துப் பேசிய டாக்டர் விவியன், “உக்ரேனில் நீடிக்கும் போர், சூடானின் உள்நாட்டுப் போர், மத்திய கிழக்கில் நிகழும் போர் ஆகியன விரைவில் முடிவுக்கு வருவதுபோலத் தெரியவில்லை,” என்றார்.

போருக்கு முடிவுகட்டும் உடனடித் தீர்மானத்துக்கு வாய்ப்பில்லை என்றபோதிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இதில் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் தங்களது பங்கைச் செய்யத் தயாராக உள்ளனர். மனிதாபிமான உதவிகளை வழங்க, மத்திய கிழக்கில் உள்ள பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் மேலும் அதிகம் பணியாற்றும்,” என்றார் டாக்டர் விவியன்.

குறிப்புச் சொற்கள்