சிஓஇ: கார்களுக்கான ‘ஏ’, ‘பி’ பிரிவுகளை ஒன்றிணைக்க பரிந்துரை

சிஓஇ: கார்களுக்கான ‘ஏ’, ‘பி’ பிரிவுகளை ஒன்றிணைக்க பரிந்துரை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Oct 2026 - 6:08 pm

2 mins read

பொதுச் சந்தைக்கான கார்கள் மற்றும் உயர்தர ரகக் கார்களின் விலைகளுக்கு இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாற்றங்களின் ஒரு பகுதியாக, வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) முறையின்கீழ் உள்ள இரண்டு கார் வகைகளையும் ஒரே வகையாக இணைக்க அமைப்புகள் முன்மொழிந்துள்ளன.

‘ஏ’ பிரிவு, ‘பி’ பிரிவு ஆகியவற்றை இணைப்பதுடன், காரின் மதிப்பின் அடிப்படையில் தற்போதைய சிஓஇ கட்டணத்தில் தள்ளுபடிகள் அல்லது கூடுதல் கட்டணங்களை உள்ளடக்கிய ஒரு படிநிலை முறையையும் நிலப் போக்குவரத்து ஆணையம் முன்மொழிந்துள்ளது.

சிஓஇ முறையை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக ஆணையம் தனது முதற்கட்ட முன்மொழிவை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 8) வெளியிட்டது. ‘ஏ’ பிரிவு, ‘பி’ பிரிவு ஆகியவற்றிற்கான கட்டணங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வந்ததையடுத்து, மார்ச் மாதத்தில் இந்த மறுஆய்வு அறிவிக்கப்பட்டது.

தற்போதைய அமைப்பில், இரண்டு கார் பிரிவுகள் இயந்திரத்தின் அளவு மற்றும் ஆற்றல் வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டவை. மின்சாரக் காருக்கு ஆற்றல் வெளியீட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

இருப்பினும், உயர் ரக கார்களின் வாகன விவரக்குறிப்புகளை, ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கான இயந்திர ஆற்றல் வரம்புகளுக்குள் பொருந்துமாறு கார் உற்பத்தியாளர்கள் இப்போது அடிக்கடி சரிசெய்கிறார்கள் என்று ஆணையம் கூறியது.

எனவே, அது ‘ஃபீபேட்’ (feebate) என்று அழைக்கப்படும் ஒரு முறையை முன்மொழிந்துள்ளது. இது, பொதுச் சந்தைக் கார்களை வாங்குபவர்களை விட, அதிக மதிப்புள்ள கார்களை வாங்குபவர்கள் அதிக சந்தா செலுத்துவதை உறுதி செய்வதற்காக, தள்ளுபடிகளையும் கூடுதல் கட்டணங்களையும் பயன்படுத்துகிறது.

நிலப் போக்குவரத்து ஆணையம் இரண்டு தெரிவுகளைப் பரிந்துரைத்துள்ளது. ஒன்று, மூன்று பிரிவுகள் (குறைந்த விலை வகை, நடுத்தர விலை வகை, சொகுசு வகை). மற்றொன்று ஐந்து பிரிவுகள் (குறைந்த விலை வகை, அதைவிட சற்று உயர்ந்த விலை வகை, நடுத்தர விலை வகை, அதைவிட சற்று உயர்ந்த விலை வகை, ஆக விலை உயர்ந்த வகை).

அக்டோபர் 8ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வு அறிக்கை ஒன்றில், பொதுச் சந்தை மற்றும் ஆடம்பர ரகக் கார்களை வாங்குபவர்கள் ஒரே பிரிவின் கீழ் ஏலத்தில் பங்கேற்றாலும், அவர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகைகள், கூடுதல் கட்டணங்கள் மூலம் அவர்கள் செலுத்தும் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் கட்டிக்காக்க முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மறுஆய்வின் நோக்கம் “சிஓஇயின் ஒட்டுமொத்த விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதல்ல. ஏனெனில், அந்த விலைகள் தொடர்ந்து தேவை மற்றும் கிடைக்கக்கூடிய சிஓஇயின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்” என்றும் ஆணையம் மேலும் குறிப்பிட்டது.

இதற்கிடையே, ‘இ’ பிரிவு மற்றும் உரிமப் புதுப்பிப்பு விதிகள் குறித்தும் நிலப் போக்குவரத்து ஆணையம் மறுஆய்வு செய்து வருகிறது. இதன் தொடர்பில் பொதுமக்கள் நவம்பர் 2ஆம் தேதிவரை கருத்து தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்சந்தைவிலை