ஒன் ஃபுல்லர்ட்டன் (One Fullerton) பகுதியில் உள்ள மெர்லயன் சிலை சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகளுக்காகச் செப்டம்பர் 8ஆம் தேதி தற்காலிகமாக மூடப்படுகிறது.
அன்றைய தினம் சுற்றுப்பயணிகள் அங்குப் புகைப்படம் எடுக்க முடியாது.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் வேளையில், மெர்லயன் பூங்காவில் உள்ள அச்சிலையின் சில பகுதிகள் சாரக் கட்டைகளால் மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பராமரிப்புப் பணி காரணமாகச் சிலை இருக்கும் இடத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று பயணத்துறைக் கழகம் அறிக்கையில் குறிப்பிட்டது.
நீரைப் பீய்ச்சியடிக்கும் 8.6 மீட்டர் உயரமுள்ள மெர்லயன் சிலை உலகப் புகழ்பெற்றது. பாதிச் சிங்கம், பாதி மீன் உருவம் கொண்ட மெர்லயன் சிலை, இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பழுதுபார்க்கும் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டது.
பெரிய மெர்லயன் சிலை அருகே 2 மீட்டர் உயரமுள்ள மெர்லயன் குட்டிச் சிலையும் அமைந்துள்ளது.
அந்த இரு சிலைகளும் முதன்முதலில் 1972ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லீ குவான் யூவால் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் திறந்து வைக்கப்பட்டன.
சிங்கப்பூரில் மொத்தம் ஆறு மெர்லயன் சிலைகள் உள்ளன.


