சிறுநீரில் உள்ள புரதங்களைக் கொண்டு டெங்கி காய்ச்சலின் அளவைக் கண்டறியும் வழிமுறையை சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆய்வொன்றில் வெளியிட்டுள்ளனர்.
இங்குள்ள 125 நோயாளிகளைச் சோதித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. டாக்டர் சியா பொ யிங், டாக்டர் அன்ட்ரூ டியோ ஆகிய இரு மருத்துவர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவுகள் ஜனவரி 9ஆம் தேதி மருத்துவ நிபுணர்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் தொற்றுநோய்களுக்கான அறிவியல் சஞ்சிகையில் (Open Forum Infectious Diseases) வெளியிடப்பட்டது.
டாக்டர் சியா பொ யிங், தேசிய தொற்றுநோய் நிலைய ஆய்வகத்தின் தலைவர் ஆவார். டாக்டர் அன்ட்ரூ டியோ, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் மூத்த ஆய்வாளர் ஆவார்.
ஒருவரின் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய சிறுநீர் பரிசோதனைகளின் வழியாக டெங்கி நோய்த் தொற்று கண்டறியப்படும் என்பதால் இந்தப் புதிய முறையால் நேரம் விரயமாகாது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் தற்போது டெங்கி காய்ச்சல் கண்டறியப்படுகிறது.
அதன்வழி காய்ச்சலுக்கான மருத்துவ முறைகளை உடனடியாக ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்பது நம்பிக்கை. ஆய்வு நிலையில் உள்ள இந்தச் சோதனைக் கருவிகள் தயாராக ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.
ஆய்வாளர்கள் அனைத்துலக ரீதியில் அங்கீகாரம் பெற்று டெங்கி பரவலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கவுள்ளனர்.
அதன்வழியாக உலகில் எளிதில் எட்டமுடியாத இடங்களில் இயங்கும் சமூக மருத்துவ சேவையாளர்களுக்கும் உதவிகள் வழங்க முடியும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

