மெக்சிகோவில் முதலீடு செய்வது என்பது, நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் தனது வர்த்தகக் கட்டமைப்பை பன்முகப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
தமது நான்கு நாள் மெக்சிகோ வருகையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லத்தின் அமெரிக்காவில் பொருளியல் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகக் குறிப்பிட்டார்.
“மெக்சிகோ போன்ற நாடுகள் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளதோடு அவ்வாறு பணியாற்றுவதை மதிப்புமிக்க ஒன்றாகக் கருதுகின்றன.
“அதுபோன்ற பங்காளித்துவம் நன்மை பயக்கும் என்பதால் சிங்கப்பூரும் அவற்றின் உறவுகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“மெக்சிகோ அல்லது எந்த ஒரு நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவது பற்றி சிந்திக்கும்போது, சிங்கப்பூருக்கு வலுசேர்க்கக்கூடிய வகையில் அறிவாற்றல், சிந்தனை மற்றும் திறன்கள் இருவழியாக இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
“அவ்வாறு செய்வதன் மூலம் சிங்கப்பூரின் வர்த்தகத் திறன்கள் வளரும்,” என்றார் அதிபர் தர்மன்.
“சிங்கப்பூரின் ஏற்றுமதிகளுக்குத் தேவைப்படும் சந்தை நுழைவை மெக்சிகோவின் பன்முகத்தன்மை வழங்குகிறது. அத்துடன் உணவுப் பாதுகாப்புக்கும் அது உதவுகிறது.
“மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்றவை தொடர்பான யோசனைகளை தனது திறன் களஞ்சியத்தின் மூலம் மெக்சிகோ வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
“உலகின் நிலையற்ற தன்மை சில காலங்களுக்கு நீடிக்கலாம். இருப்பினும், நாடுகளுடனும் வட்டாரங்களுடனும் கொண்டிருக்கும் வலுவான உறவுகள் மட்டுமே மீள்திறனை வழங்கக்கூடியவை,” என்று திரு தர்மன் தமது பேட்டியில் விளக்கினார்.
அதிபர் தர்மன் மெக்சிகோவுக்கு தமது அதிகாரத்துவ அறிமுக வருகையை மேற்கொண்டார். அவர் இவ்வாண்டில் இந்தியா, எகிப்து, பெல்ஜியம், லக்சம்பர்க் போன்ற நாடுகளுக்கும் சென்றார்.
மெக்சிகோ பயணத்தின்போது அங்குள்ள மாநிலங்களின் ஆளுநர்களைச் சந்தித்ததோடு வர்த்தகத் தலைவர்களுடனும் திரு தர்மன் பேச்சு நடத்தினார்.
“சிங்கப்பூர்-மெக்சிகோ உறவை வலுப்படுத்துவதில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களும் இந்த உறவுக்கு முக்கிய தூணாக விளங்குகின்றன,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஏறத்தாழ 3,200 கிலோமீட்டர் நீளமானதாகவும் கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் அகன்றதாகவும் உள்ள மெக்சிகோவில் 31 மாநிலங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன.
“ஒட்டுமொத்தமாக, குறைந்த திறன்கள் மற்றும் நடுத்தர திறன்கள் நிறைந்த செயல்பாடுகளைக் கொண்ட மெக்சிகோ ஒரு வளரும் நாடுபோலத் தோன்றினாலும் மேம்பட்ட, அதிநவீன மையங்களை அது கொண்டுள்ளது.
“சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை அத்தகைய மையங்களில்தான் அவர்கள் காண்கிறார்கள்,” என்றார் அதிபர்.

